×

தண்டையார்பேட்டையில் சினிமா பட பாணியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம்: மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து மணமகள்; கழுத்தில் கட்ட முயன்ற காதலன்

* சரமாரி அடி உதை; போலீசில் ஒப்படைப்பு
* திருமணம் நின்றது; சோகத்தில் வெளியேறிய உறவினர்கள்

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற காதலனை, அவரது அண்ணனும் உறவினர்களும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் திருமணம் நின்றது. சோகத்தில் உறவினர்கள், கோயிலை விட்டு வெளியேறினர். காதலன், போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சினிமா பட பாணியில் நடந்த அதிர வைக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ரேவதி (20). தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (21). மரைன் இன்ஜினியர்.

ரேவதிக்கும், மணிகண்டனுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அப்போது, செப்டம்பர் 9ம் தேதி (இன்று), தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள முருகன் கோயிலில் திருமணத்தை நடத்தலாம் எனவும், அங்குள்ள மண்டபத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் பெரியோர்கள் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டது. மேலும் மணமகன் வீட்டார் சார்பில் அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலையில் (செப். 9) வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தலாம் எனவும் அன்றைய தினமே பேசி முடிக்கப்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து வந்தனர்.

இன்று திருமணம் என்பதால் நேற்றே உறவினர்கள் பலர், மணமகன், மணமகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இதனால் திருமண வீடுகள் களைகட்டியிருந்தது.
இந்நிலையில் இன்று காலையில் திருமணம் நடக்க இருந்த நேதாஜி நகரில் உள்ள முருகன் கோயிலில் மணமகன், மணமகள் வீட்டார்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து விட்டனர். இதனால் திருமண விழா களைகட்டியிருந்தது. காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் முகூர்த்த நேரம் என்பதால் நேரம் நெருங்க நெருங்க பரபரப்பானது. தாலி கட்டுவதற்கான நேரமும் நெருங்கியது. சரியாக காலை 7 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஐயர் வேத மந்திரங்கள் ஓதியபடி மணமகன் மணிகண்டன் கையில் தாலி எடுத்து கொடுத்தார்.

அதை அவர், மணமகள் ரேவதி கழுத்தில் கட்ட முயன்றார். அந்த நேரத்தில், அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், பாய்ந்து சென்று, மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து, மணமகள் கழுத்தில் கட்ட முற்பட்டார். இதை பார்த்ததும், அங்கு திரண்டிருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஒருகணம் அப்படியே நிலைகுலைந்து போயினர். சற்றும் யோசிக்கலாமல் அடுத்த கணமே, அங்கு நின்றிருந்த மணமகளின் அண்ணன் நாகநாதன் பாய்ந்து சென்று, அந்த வாலிபரின் கையில் இருந்த தாலியை பறித்தார். கடும் ஆத்திரம் பொங்க, அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தார். உறவினர்களும் சேர்ந்து தாக்கினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கூட்டம் கூடியது.

இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தாலி கட்ட முயன்ற அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு: தாலி கட்ட முயன்ற வாலிபர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த சதீஷ் (25). இவர், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்த்து வருபவர்தான் மணமகள் ரேவதி. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென ரேவதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இந்த விவகாரத்தை அவரது பெற்றோரிடம் சொல்ல முடியாமல் ரேவதி தவித்துள்ளார். அதே நேரத்தில் சதீஷுக்கும் என்ன செய்வதென்றே தெரியலாமல் இருந்துள்ளார். நாட்கள் கடந்தோட, திருமண நாளும் நெருங்கியது. ரேவதியின் திருமணத்துக்கான வேலைகளை சதீஷும் உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நேரத்தில்தான் வேறு வழியில்லாமல் இன்று திருமணம் நடக்க இருந்த நேரத்தில் மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து ரேவதியின் கழுத்தில் தாலி கட்ட சதீஷ் முயன்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் ஆத்திரத்துடன் திருமணமே வேண்டாம் என ஆவேசத்துடன் கூறினர்.

அதே நேரத்தில் மணமகன், ‘இனிமேல் எப்படி நான் தாலி கட்டுவேன், இப்படிப்பட்ட பெண்ணுடன் எப்படி வாழ்வேன், இந்த திருமணமே வேண்டாம், நாங்கள் செலவழித்த பணத்தை கொடுங்கள்’ என்று கறாராக கூறினார். அவர்களது வீட்டாரும் இதையே வலியுறுத்தினர். அதே நேரத்தில் ரேவதியும், ‘சதீஷுடன் தான் செல்வேன், இந்த திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை’ என்று கூறினார். இதையடுத்து, மணமகன் வீட்டார் கனத்த இதையத்துடன் அங்கிருந்து வெளியேறினர். திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் மிகுந்த சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது. இதைத் தொடர்ந்து சதீஷின் பெற்றோரை போலீசார் வரவழைத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் ரேவதியின் வீட்டார், நடந்த விவரங்களை கூறி, இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Thandaiyarpettai , Shocking incident in Thandaiyarpettai style: bride grabs thali from groom's hand; A lover who tried to tie his neck
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி...