செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய கமிஷனர்

திருச்சி : கடந்த 30.8.22ம் தேதி இரவு 2.30 மணிக்கு திருவானைக்கோவில் டீக்கடை முன்பு தனியார் உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த்(19) என்பவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உடனடியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க இரவு பணியில் இருந்த காவல் அதிகாரிகள், ரோந்து பணியில் இருந்த காவல் ஆளினர்கள் மற்றும் காவல் ரோந்து வாகனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து திருச்சி மாநகரத்தில் இரவு பணியில் இருந்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை செய்தும் மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முற்படும்போது அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு உதவியாளர் பாஸ்கர், தலைமை காவலர்கள் டேவிட் சாலமன், செந்தில், ஜோசப் சகாயராஜ், ஆகியோர்கள் செல்போன் கொள்ளையர்களை சம்பவ இடத்திலேயே மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்த மேலும் ஒரு செல்போன்கள் உட்பட 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விக்னேஸ்வரன்(23), அஜெய்ராஜ்(22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேற்கண்ட கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டி மெச்சத் தகுந்த வகையில் பணி செய்தமைக்காக பணி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Related Stories: