பெரம்பலூரில் முதல்வரின் காலை உணவு திட்ட முன்னோட்ட சோதனை பயிற்சி-கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூரில் காலை உணவு திட்டம் சிறப்பாக நடைபெறுவது குறித்த முன்னோட்ட சோதனை பயிற்சி நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆய்வு செய்தார்.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும், வருகையை அதிகரிக்கவும், வேலைகளுக்கு செல்லும் தாய்மார்களின் பணி சுமையினை குறைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது. இந்தக் காலை உணவு சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 15ம் தேதி மதுரையில் துவக்கி வைக்க உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்துவது குறித்த சோதனை முயற்சி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி முத்து நகர் அரசு தொடக்கப்பள்ளியில் நவீன சமையல் கூடத்தில் 3 பள்ளிகளுக்கான உணவுகள் தயாரிக்கப்பட்டு எடுத்து செல்லப்படும். அதன்படி நேற்று உணவான வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா சாப்பிட்டு பார்த்து சோதனை செய்தார்.

பிறகு முத்து நகர் அரசு பள்ளியிலிருந்து மேலும் 2 பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கப்படுவதை அந்த 2 பள்ளிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார். இத்திட்டம் 1 நாள் சோதனை முயற்சியாக நேற்று மட்டுமே செயல்படுத்தப்பட்டது. வருகின்ற 15ம் தேதி முதல் தொடர்ந்து அமல்படுத்தப்படும். காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளியில் சுவையான விதவிதமான உணவுகள் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட புதிய பாத்திரங்கள், தட்டு, டம்ளர் உட்பட பல்வேறு பொருட்களை ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: