×

யானை தந்தம் கடத்தல் வழக்கு விசாரணையால் மன உளைச்சல் பழங்குடியின வாலிபர் தற்கொலை சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்-குன்னூரில் பரபரப்பு

குன்னூர் :  யானை தந்தம் கடத்தல் தொடர்பான வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையால் மன உளைச்சலில் குன்னூர் அருகே பழங்குடியின வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் யானை தந்தத்துடன் இருவர் கடந்த 2015ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து யானை தந்தத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜோகிகோம்பை குரும்பர் பழங்குடியினத்தை சேர்ந்த  பொன்னுசாமி (41), ரங்கன் மற்றும் சந்திரன் ஆகியோர் மூலம் யானை தந்தம் கிடைத்ததாக தெரிவித்தனர். அதன்படி  ரங்கன், சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பொன்னுசாமியும் கைதானார்.

பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவ்வழக்கு விசாரணை சிபிஐ தரப்பில் தொடர்ந்து நடந்து வந்தது. மேலும் கோத்தகிரியில் உள்ள அமர்வு நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. பொன்னுசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர். பொன்னுசாமி தனது குடும்பத்துடன் ஜோகிகோம்பை பழங்குடியின கிராமத்தில் வசித்து வந்தார். குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆனது என்பதால் மனைவியை செங்கல்புதூர் கிராமத்தில் தங்கவைத்து பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஐ காவல்துறை அதிகாரிகள் 6க்கும் மேற்பட்டோர் செங்கல்புதூர் கிராமத்திற்கு சென்று பொன்னுசாமியிடம் கிராம மக்கள் முன்னிலையில் நீண்ட நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் யானை தந்தம் கடத்தல் தொடர்பான வழக்கில் கோத்தகிரி நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக பொன்னுசாமி சென்றுள்ளார்.
வாய்தா முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவரை  மீண்டும் பிடித்து காட்டேரி என்னும் பகுதியில் வைத்து இரவு வரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் பொன்னுசாமி நேற்று அதிகாலையில் செங்கல் புதூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது பற்றி பழங்குடியின மக்கள் கூறுகையில், ‘‘2015ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் யானை தந்தம் கடத்தலுக்கும், பொன்னுசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் பொன்னுசாமி உள்பட 3 பேரை குறிப்பிட்டு‌ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு நடந்து வந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்குள் கடந்த 3ம் தேதி புகுந்து விசாரணை என்னும் பெயரில் கடுமையாக நடந்து கொண்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொன்னுசாமி அழுது புலம்பினார்.

இதற்கு பின்னர்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்’’ என்றனர். இந்நிலையில் அவர்கள் குன்னூர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று மாலையில் திரண்டனர். பொன்னுசாமி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, ஏடிஎஸ்பி மோகன்நவாஸ், குன்னூர் வனச்சரகர் சசிகுமார், குன்னூர் தாசில்தார் சிவகுமார் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளிடம் முறையாக உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’’ என மக்கள் கூறினர்.

மேலும் ‘‘இறந்த  பொன்னுசாமியின் மனைவிக்கு 6  மாத கைக்குழந்தை இருப்பதால் அவரின்  வாழ்வாதாரத்திற்கு உரிய வழி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பழங்குடியின மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய  வேண்டும்’’ எனவும் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்த சப்-கலெக்டர்  தீபனா விஸ்வேஷ்வரி, ‘‘பொன்னுசாமி இறப்பு குறித்து உரிய விசாரணை  நடத்தப்படும். அவரின் மனைவி கைக்குழந்தையுடன் இருப்பதால் மாவட்ட கலெக்டர்  கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என  தெரிவித்தார். இதையடுத்து பொன்னுசாமி உடலை வாங்க மக்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

வழக்கு சிபிஐக்கு மாற்றம்

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘2010 மற்றும் 2011 ம் ஆண்டில் 6 யானைகள் கொல்லப்பட்டுள்ளது. யானைகளின் தந்தங்களை கடத்தி பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு கடத்தியுள்ளனர். கேரளா போன்ற பகுதிகளுக்கும் உள்ளிட்ட பகுதிகளில் கடத்தியுள்ளனர். ஆசனூர், மேகமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 40 முதல் 45 வழக்குகளை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கைதான குபேரன் மற்றும் சிங்கம் ஆகியோர் குன்னூரில் உள்ள சிலரை அடையாளம் காட்டியுள்ளனர். அதன் பேரில் பொன்னுசாமி உட்பட சிலர் கைதாகினர். இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி 3ம் தேதி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ திலீப் இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடத்தியுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

Tags : Coonoor , Coonoor: A tribal youth commits suicide near Coonoor due to CBI investigation in elephant ivory smuggling case.
× RELATED பள்ளி மாணவி கர்ப்பம் ஆசிரியர் மீது வழக்கு