×

திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் பல்வேறு பணிகள் நிறைவு வளர்ச்சி திட்டப்பணிகளில் முதன்மை வகிக்கும் முத்துப்பேட்டை பேரூராட்சி-பொதுமக்கள் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை : திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் பல்வேறு பணிகளை நிறைவு செய்து வளர்ச்சி திட்டப்பணிகளில் நிறைவேற்றுவதில் முத்துப்பேட்டை பேரூராட்சி முதன்மை வகிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகள் கொண்ட மாவட்டத்தில் பெரிய பேரூராட்சியாகும். சுமார் 30 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த பேரூராட்சியை நகராட்சியாக கொண்டு வரவேண்டும் என கடந்த திமுக ஆட்சியில் அதற்கான அனைத்து பணிகளையும் அப்போதைய அரசும் அரசு அதிகாரிகளும் துரிதமாக மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் துர்திஷ்டவசமாக அடுத்த வந்த ஆட்சியாளர்கள் கிடைப்பில் போட்டனர். இதேபோன்றுதான் 2011ம் ஆண்டு திமுக அரசு கடைசி நேரத்தில் தாலுகா அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சி இதனை கிடப்பில் போட்டது. தற்போது பொறுபேற்றுள்ள திமுக அரசு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைப்புக்காட்டி வருகிறது.

இந்நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி கட்டிடம், சார்.பதிவாளர் அலுவலம், காவல் நிலையம், காவலர் குடியிருப்பு, அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய கட்டிடம், உழவர் சந்தை கட்டிடம் அதேபோல் பல அரசு பள்ளி கட்டிடங்கள், அங்காடி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த கட்டிடங்கள், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட கட்டிடம் பேருந்து பயணிகள் கட்டிடங்கள் என அனைத்தும் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாகும். அதேபோல் பல்வேறு தெருக்களின் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்டதாகும். இப்படி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்த திமுக அரசு மக்களுக்கான அரசாக அன்றே இருந்தது.

ஆனால் அடுத்து வந்த அதிமுக அரசு இப்பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை முடக்கிய நிலையில் தற்போது உள்ள திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆண்டுகளில் இயற்கை இடர்பாடு நிதியில் ரூ.16.40 லட்சத்தில் ஒரு பணி, 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் ரூ.45 லட்சம், கலைஞர் நகர்புற மான்ய திட்டத்தில் ரூ.83.60லட்சம். நமக்கு நாமே திட்டம் ரூ.15லட்சம், பணிகள் நடந்து மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்த பிறகு பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த மும்தாஜ் நவாஸ்கான் பொறுப்பேற்ற பிறகு கஜா புயலில் சேதமான 980 மின் கம்பங்களில் தெருவிளக்குகள் போடப்பட்டுள்ளது, வரும் கோடை நேரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஏற்கனவே புதிய நிலையத்தில் இருந்த 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங், அரசக்குளம் அருகே உள்ள 4 லட்சம் லிட்டர் குடிநீர் டேங் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏற்கனவே மருதங்காவெளி, கோசக்குளம் செம்படவன்காடு ஆகிய மூன்று பகுதியில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் தலா 5லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. அதேபோல் குடிநீர் மிகவும் தட்டுப்பாடு உள்ள பகுதியான தெற்குகாடு மற்றும் பேட்டை அங்காளம்மன் கோவில் அருகே ஆகிய இரண்டு இடங்களில் தலா 10லட்சம் செலவில் குடிநீர் சுத்தகரிப்பு டேங் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதேபோல் பொது சுகாதரத்தில் முழு கவனம் செலுத்தி போதுமான பேரூராட்சி நிரந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் தர்க்காலிக பணியாளர்களை கொண்டு அனைத்து வார்டுகளிலும் ஒரு லாரி, ஒரு மினி லாரி, ஒரு டிராக்டர், இரண்டு பேட்டரி வாகனம் மற்றும் 18தள்ளுவண்டிகள் மூலம் அன்றாடும் சேறும் குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து எடுத்து ஒரு சுகாதாரமான பகுதியாக மாற்றப்பட்டது.

மேலும் சுகாதார பணிக்கு ஒரு டிப்பர் லாரியும், 12பேட்டரி வாகனமும் வாங்க அதற்கான பணிகள் நடந்து வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்த கழிப்பறையை சீரமைத்து கூடுதலாக ரூ.1.90லட்சம் செலவில் கழிப்பறை கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதேபோல் அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் சீரமைக்கப்பட்டு தடையின்றி கழிவுநீர் வடிய வழிவகை செய்யப்பட்டது இப்படி அனைத்து பணிகளும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் 15வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ.67லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் கோசக்குளம் ரூ.19 லட்சத்தில் தடுபுசுவர் பணி, ரஹ்மத் நகர் ரூ.7லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால், பரக்கத் நகரில் ரூ.5லட்சம் செலவில் கழிவுநீர் வடிகால், குத்பா பள்ளி வாசல் அருகே ரூ.10லட்சத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம், நண்டு மரைக்காயர் தெருவில் கழிவுநீர் வடிகால் குழாய் அமைத்தல், செக்கடிதெருவில் நூராங்குண்டு வடிவாய்க்கால் மினி பாலம், கிழக்கு கடற்க்கரை சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு சுற்று வேலி அமைத்தால் பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

இப்படி இப்பகுதி மக்கள் நலன் கருதி அவர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளை தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ் ஒப்புதலுடன் செயல் அலுவலர் நாராயணமூர்த்தி, பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவகுமார் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் செய்து வருகின்றனர். இதனால் முத்துப்பேட்டை பேரூராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளில் முதன்மை வகிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : DMK government ,Muthupet , Muthuppet: After the DMK government took charge, Muthupet has completed various tasks and implemented development projects
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...