ஊட்டி : ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2வது சீசனும் கடைபிடிக்கப்படுகிறது. 2வது சீசனின்போது புதுமண தம்பதிகள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிடுவது வாடிக்கை. தற்போது ஊட்டியில் 2வது சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவின் முக்கிய பண்டிகை என்பதால் அங்கு சுமார் 10 நாட்கள் விடுமுறை விடப்படும். ஓணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு விமர்சையாக கொண்டாடுவர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மலையாள மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல ஊட்டி, குன்னூர், குந்தா மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளிலும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இதனால், ஆண்டு தோறும் ஓணம் பண்டிகை இப்பகுதிகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
ஓணம் பண்டிகைக்கு நீலகிரி மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓணம் கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு நீலகிரியில் ஓணம் திருவிழா களைகட்டியது. ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்னரே வீடுகளில் பூக்கோலமிட்டு அலங்கரித்து, கோயில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். பூக்கள், பழம் காய்கறி போன்றவற்றை வாங்கும் மக்களால் சந்தைகள் எப்போதும் இல்லாத அளவுக்கு நிரம்பி வழிகின்றன. கல்வி நிலையங்களிலும் ஓணம் கொண்டாட்டம் களைகட்டியது.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி, ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள் தங்களது வீடுகளில் சாணமிட்டு அதில் பல்வேறு வண்ண வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ பூக்கோலமிட்டு ஓணத்தை கொண்டாடினர். பல்வேறு வகை காய்கறிகளை கொண்டு உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். கேரள பண்பாடு போற்றும் மக்கள், வீடுகளிலும் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணத்தையொட்டி ஊட்டி ஐயப்பன் கோயிலில் பூக்கோலமிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோல மாவட்டம் முழுவதும் பிற கோயில்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது.
ஊட்டியை சேர்ந்த மலையாள மொழி பேசும் மக்கள் கூறுகையில், ‘‘ஓணம் திருநாளில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அனைத்து வீடுகளிலும், பூக்கோலமிட்டு வழிபட்டு வருகிறோம். கேரள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்து வழிபாடு செய்யப்படுகிறது. மேலும், செண்டை மேளங்கள் முழங்க திருவாதிரைக்களி எனப்படும் பாரம்பரிய நடனமும் நடக்கும். அறுவை உணவும் இறைவனுக்கு படைக்கப்படும்’’ என குறிப்பிட்டனர்.
ஓணம் பண்டிகை விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்பட்டது. கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஓணம் பண்டிகையையொட்டி ஊட்டியில் முகாமிட்டு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வர். அதேபோல நேற்றும் ஓணம் கொண்டாப்பட்ட நிலையில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கேரள சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கேரள சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது. இதமான காலநிலை நிலவிய நிலையில் படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்களில் அறைகள் நிரம்பி இருந்தன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருப்பவர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.