நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோலாகலமாக ெகாண்டாடப்பட்டது.குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் 10 நாட்கள் ெகாண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு அந்தநிலை மாறி வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் புத்தாடை அணிந்து ஓண பண்டிகையை மகிழ்ச்சியுடன் ெகாண்டாடினர்.
குமரி - கேரள எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் மோகினியாட்டம், திருவாதிரைக்களி, தெய்யம், சிங்காரி மேளம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. கோயில்களில் திருவோண பண்டிகை நாளில் வழிபாடு நடத்த அதிக அளவில் மக்கள் திரண்டிருந்தனர். அதிகாலையில் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். வீடுகளில் அத்தப்பூக்களம் அமைத்தும், ஊஞ்சல் கட்டியும் ஓண பண்டிகையை கொண்டாடினர். மேலும் அவியல், கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி, அப்பளம், அடை பிரதமன் என்று அறுசுவையுடன் கூடிய ஓண சத்யா வீடுகளில் தயார் செய்து உண்டு மகிழ்ந்தனர். ஓட்டல்களிலும் சிறப்பு ஓண சத்யாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரிகளிலும் உறியடி நிகழ்வுகள், வடம் இழுத்தல் போன்ற போட்டிகள் மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்டன. களியக்காவிளை, பளுகல், கொல்லங்கோடு, குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், பத்மநாபபுரம், தக்கலை, முன்சிறை, மேல்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓண பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலாச்சார ஊர்வலங்களும் நடைபெற்றது. இதில் பல்வேறு வேடமணிந்து சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை மகாபலி உள்ளிட்டவர்களின் வேடம் அணிந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
நாகர்கோவில், கிருஷ்ணன் கோயில் யாதவர் ெதருவில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி ஆதி பராசக்திக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. காலை தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 54 பேருக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது. சக்திபீடத்தலைவர் சின்னத்தம்பி வழங்கினார்.
மகளிர் கேரள பாரம்பரிய ஆடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பெண்கள் கோயில் கருவறைக்குள் சென்று குங்கும அர்ச்சனை செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சக்திபீட துணை தலைவர் அருணாச்சலம் தொடக்கி வைத்தார். சக்தி பீட தலைவர் சின்னத்தம்பி, பொருளாளர் அசோக்குமார், நாகராஜன், சுப்பிரமணியன், செந்தில், பால்ராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.