×

1,019 நாட்களுக்கு பிறகு சதம் விளாசினார் கோஹ்லி; டி20ல் முதல் முறையாக சதம்

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடனான சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய விராத் கோஹ்லி 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சதம் விளாசி அசத்தினார். சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி கண்ட இந்திய அணி, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில் நேற்று சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் முதலில் பந்துவீசியது. ராகுல், கோஹ்லி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 119 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ராகுல் 62 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினார். சூரியகுமார் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பன்ட் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளிய கோஹ்லி 1,019 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

சர்வதேச டி20ல் முதல் சதம் அடித்துள்ள அவர், அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டீயலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (71 சதம்) சாதனையை சமன் செய்து 2வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த வரிசையில் சச்சின் 100 சர்வதேச சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. கோஹ்லி 122 ரன் (61 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்), பன்ட் 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சர்வதேச டி20ல் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் சாதனையையும் கோஹ்லி நேற்று முறியடித்தார். முன்னதாக ரோகித் 2017ல் இலங்கைக்கு எதிராக 118 ரன் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.  ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது.

Tags : Kohli , Kohli hits century after 1,019 days; First century in T20I
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு