கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதல் ரயில் சேவை; தெற்கு ரயில்வே முடிவு

சென்னை: செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான 30 கிமீ நீளமுள்ள மூன்றாவது பாதையில் ரயில்களின் வேகம் மணிக்கு 80 கிமீ-ல் இருந்து 100 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்க தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்து தடமாக உள்ளது. இந்த தடத்தில் தினமும், 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன், போதிய ரயில் பாதை இல்லாததால், சென்னை கடற்கரையில் புறப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே அதிகளவில் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளின் அசுர வளர்ச்சியாலும், வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், மஹிந்திரா சிட்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும், சென்னைக்கு வந்து பணி புரிவோர் எண்ணிக்கை அதிகரித்தது. அதே போல், புறநகர் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் ஐ.டி., நிறுவனங்களில் சென்னையில் வசிக்கும் பலர் பணியாற்றுகின்றனர். புறநகரில் உள்ள பிரபல கல்லூரிகளில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் வசதிக்காக, கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதே போல், செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

அதன்பேரில், செங்கல்பட்டு வரை கூடுதல் ரயில்களை இயக்க, ரூ.598 கோடியில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ., தொலைவுக்கு 3வது பாதை அமைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன், ரயில் சேவையும் துவக்கப்பட்டது. தற்போது இந்த 3வது ரயில் பாதை மூலம் கூடுதல் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இந்த 3வது ரயில் பாதையில் தெற்கு ரயில்வே சார்பில் அனுமதிக்கப்பட்ட வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், செங்கல்பட்டு-கடற்கரை இடையே விரைவு ரயில்களை அதிக அளவில் சேர்ப்பதைத் தவிர்த்து, காலை நேரத்தில் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே ரயில்வே பரிசீலித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் புதிதாக அமைக்கப்பட்ட இந்த பாதை புறநகர் ரயில்கள் மற்றும் எப்போதாவது எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவது லைனில் முன்பு அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேக வரம்பு 80 கி.மீ ஆகும். இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் அதிகாரி கூறியதாவது: இந்த வழித்தடத்தில் வேகத்தை அதிகரிப்பதானாலும், நெரிசலைக் குறைக்கவும் ரயில்வேக்கு அதிக ரயில்களை இயக்க உதவும். வரும் சில மாதங்களில் மேலும் புறநகர் ரயில்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. வேகத்தை அதிகரிக்க தடப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பாதை இயக்கப்படும் போது 80 கி.மீ., வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வழித்தடத்தில் ரயில்கள் வேகமாக பயணிக்க முடியும். ஒரு வேளை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூன்றாவது வழித்தடத்தில் இயக்கப்பட்டால், மற்ற பாதைகள் புறநகர் சேவைகளுக்கு சுலபமாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

செங்கல்பட்டு முதல் தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டாலும், காலை நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசல் மிகுந்த ரயில்கள் மற்றும் தாமதங்களால் சிரமப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த நேரத்தில் கடந்து செல்கின்றன.

இதுகுறித்து மண்டல ரயில் பயனர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் கூறியதாவது: புறகர் ரயில்களில் கூட்ட நெரிசலால் அவதிப்படும் பயணிகளுக்கு வேகத்தை அதிகரிப்பது சற்று நிம்மதியைத் தரும். செங்கல்பட்டு-தாம்பரம் இடையே மேலும் 3 முதல் 4 ரயில்களை காலை 7 மணி முதல் 9 மணி வரை இயக்க வேண்டும். இது சிரமத்தை குறைக்கும். புறநகர் ரயில்களில் காலை 6.30 மணி முதல் கூட்டமாகத் தொடங்கும். மக்கள் காலை 8.30 அல்லது 9 மணிக்குள் சென்னை பாரிமுனையை அடைய சீக்கிரம் புறப்பட வேண்டியிருப்பதால் பயணம் செய்வது மிகவும் கடினம். தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு அதிக சேவைகள் உள்ளன. மேலும் செங்கல்பட்டில் இருந்து வரும் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி வேறு ரயில்களில் பயணிக்கின்றனர். செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலான சேவைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரைக்கு காலை வேளையில் குறைந்த நிறுத்தங்கள், விரைவான சேவைகள் தேவை. மாலை நேர சேவைகள் திருப்திகரமாக உள்ளன. ஆனால் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை குறைந்தது மூன்று சேவைகளை கூடுதலாக சேர்க்கலாம். கடற்கரையிலிருந்து மாலை அல்லது இரவில் தாம்பரத்தில் முடிவடையும் சில சேவைகளை செங்கல்பட்டு வரை நீட்டிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: