குண்டும் குழியுமாக மாறிய பம்மல்; அண்ணா சாலை சீரமைக்க கோரிக்கை

பல்லாவரம்: பம்மலில் இருந்து நாகல்கேணி மற்றும் திருநீர்மலை மெயின்ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு அண்ணா சாலையே பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையில் ஏராளமான தோல் பதனிடும் தொழிற்சாலைகள், மீன்‌ மார்க்கெட், கடைகள், பிரபல மருத்துவமனை, ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அமைத்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி சரக்குகளை கையாளுவதற்கான பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பம்மல் அண்ணா சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

அதில் தற்போது மழைநீர் தேங்கி நிற்பதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மீது சகதி விழுகிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் மேடு, பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: