மீஞ்சூர், சோழவரம் மக்கள் நலன் கருதி எண்ணூரில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்; பெண்கள் வலியுறுத்தல்

அம்பத்தூர்: சென்னை பெருநகர காவல் ஆணையரகம் நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் நலன் கருதியில் 3ஆக பிரிக்கப்பட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 ஆணையாளர்கள் கீழ்  இயங்கி வருகிறது. இதில், ஆவடி ஆணையரகத்தில், ஆவடி காவல் மாவட்டம் மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டம் என பிரிக்கப்பட்டு 2 துணை ஆணையர்கள் தலைமையில் நிர்வாகம் செய்யபடுகிறது. செங்குன்றம் காவல் மாவட்டத்தின் கீழ் செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், மாதவரம் பால் பண்ணை, மணலி,  மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு என 12 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் எண்ணூர் மற்றும் அம்பத்தூரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் வன்கொடுமை, போக்சோ போன்ற வழக்குகளை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் மாதவரம் பால் பண்ணை, மணலி,  மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு ஆகிய காவல் நிலைய எல்லையில் நடக்கும் பாலியல் குற்றங்கள், பெண்கள் வன்கொடுமை, போக்சோ போன்ற வழக்குகளை எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மீஞ்சூர் பகுதியில் இருந்து அம்பத்தூர் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் என்பதால், மீஞ்சூர், சோழவரம், காட்டூர் பகுதிகளை சேர்ந்த பெண்கள், புகார் கொடுக்க அம்பத்தூர் காவல் நிலையம் செல்ல 2 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும், அவ்வாறு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் சிரமப்படும் நிலை உள்ளது.  சில நேரங்களில் இந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால் மறுநாள் வரும்படி கூறுவதால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பாதிக்கப்படும் பெண்கள் பலர் பயண தூரத்தை கருத்தில் கொண்டு புகார் கொடுக்க செல்வதில்லை. மேலும் தொடர்ந்து போலீசாரின் விசாரணைக்கு அடிக்கடி வரவழைப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதி பெண்கள் நலன் கருதி, மீஞ்சூர் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு அருகில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் தொடங்கவும், செங்குன்றம் பகுதியில் மேலும் ஒரு அனைத்து மகளிர் காவல்  நிலையம் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: