நீட் தேர்வில் தோல்வி எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை: ஆவடி அருகே பரபரப்பு

சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிலிப்பைன்ஸ் நாட்டில் 2ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த திருமுல்லைவாயலை சேர்ந்த மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல், இந்திரா நகரில் வசிப்பவர் அமுதா (38). இவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்துவிட்டார். அமுதா தனது மகள் லக்க்ஷனா ஸ்வேதா (19)வுடன் தனியாக வசித்து வந்தார். லக்க்ஷனா ஸ்வேதா 12ம் வகுப்பு முடித்துவிட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான நீட் தேர்வில் லக்க்ஷனா ஸ்வேதா தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் லக்க்ஷனா ஸ்வேதா வீட்டில் மின்விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்தனர். மாணவி லக்க்ஷனா ஸ்வேதாவின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், டாக்டருக்கு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: