×

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும்: ராகுல் காந்தி உறுதி

சென்னை: மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்த அனிதாவின் குடும்பத்தினரை நடைபயணத்தின்போது சந்தித்த ராகுல்காந்தி, ‘எந்த மாநிலத்திலும் எதையும் திணிக்க மாட்டோம்’ என்று உறுதிபட தெரிவித்தார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் இருந்து  நடைபயணத்தின்போது, அனிதாவின் தந்தை சண்முகம், அவரது சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் நேற்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்தனர்.

அவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார். அவர்கள் தமிழில் கூறியதை ஜோதிமணி எம்.பி ராகுல்காந்தியிடம் ஆங்கிலத்தில் விவரித்தார். அப்போது அவர்களை விலக்க முயன்ற தனது பாதுகாவலர்களையும் ஓரம்கட்டிவிட்டு அவர்களிடம் நடந்துகொண்டே பொறுமையாக விபரங்களை கேட்டறிந்தார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை அனிதாவின் குடும்பத்தினர் ராகுல்காந்தியிடம் முன் வைத்தனர். மேலும் தாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் ெதரிவித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் ராகுல்காந்தியிடம் அளித்தனர். அந்த மனுவை ராகுல்காந்தி முழுமையாக  வாசித்து விபரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களிடம் ராகுல் காந்தி,  எந்த மாநிலத்திலும் நீட் உட்பட எதையும் திணிக்க மாட்டோம், அது காங்கிரஸ் கட்சியின் பாலிசி அல்ல என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பின்னர் மணி ரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவதை அறிந்தேன். அவரை சந்திப்பதற்காக நான் வந்திருந்தேன். கடந்த தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என ராகுல்காந்தி கூறியிருந்தார். தற்போது கன்னியாகுமரி வந்துள்ள அவரிடம் நினைவூட்டினோம். மீண்டும் அதை வலியுறுத்த அவரை சந்தித்தோம். ஜோதிமணி எம்.பி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். தற்போது நீட் தேர்வுக்கு அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முதல் குரல் தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது. நீட் தேர்வால் எனது தங்கை அனிதா மரணம் அடைந்தார். வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெறப்போகிறது. அந்த நேரத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

நான் சொன்னதை அவர் காது கொடுத்து கேட்டார். நேரு குடும்பத்தினர் இந்திய சுதந்திரத்திற்காக போராடினர். ராகுல்காந்தி தற்போதைய ஆர்.எஸ்.எஸ் பா.ஜ கட்சிகளிடமிருந்து இந்தியாவை மீட்க போராடுகிறார். மாநில அரசின் கோரிக்கைகளை ஏற்காத அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மாநில அரசின் கோரிக்கைகளை கேட்கும் அரசாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். அதற்கு ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறினேன். அதற்கு ராகுல்காந்தி தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டார். எதிர்காலத்தில் நிகழக்கூடியதை முன்கூட்டியே தெரிந்து செயல்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனால் தான் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன். எந்த மாநிலத்திலும் நீட் உட்பட எதையும் திணிக்க மாட்டோம், அது காங்கிரஸ் கட்சியின் பாலிசி அல்ல என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congress ,Raqul Gandhi , NEET will be exempted once Congress comes to power at the centre: Rahul Gandhi assured
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...