×

அதிமுக ஆட்சியின்போது வனத்துறை திட்டப்பணிகளில் முறைகேடு புகார் சேலம், கருமந்துறையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு விசாரணை: மாவட்ட வன அலுவலர் ஆபீசில் ஆவணங்கள் பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்ட வனத்துறையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மற்றும் கருமந்துறை மலைக்கிராம பகுதிகளில் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுபணிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக துறைரீதியான புகார்கள் எழுந்தது. இதன்பேரில் சென்னை வனத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கியுள்ளது. குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் 2018-19 நிதியாண்டில் மேம்பாட்டு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், வேலையை சரிவர செய்யாமல் போலி கணக்கு எழுதி முறைகேடு செய்திருப்பதாகவும், சில பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும் எழுந்த புகார் குறித்து விஜிலென்ஸ் பிரிவு உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவர்கள், ஏற்கனவே சேலத்திற்கு 2 முறை வந்து விசாரித்தனர். அப்போது, குரும்பப்பட்டி பூங்கா வனச்சரகர் அலுவலகத்தில் இருந்து மேம்பாட்டு பணிகள் குறித்த ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், அக்காலக்கட்டத்தில் பூங்காவில் பணியில் இருந்த வனச்சரகர், வனவர், வனகாப்பாளர் என 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று, சென்னை வனத்துறை விஜிலென்ஸ் உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையிலான குழுவினர் மீண்டும் சேலம் வந்தனர். அவர்கள், சேலம் மாவட்ட வனஅலுவலர் அலுவலகத்தில் குரும்பப்பட்டி பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அதில், என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?, அதனை ஒப்பந்தம் எடுத்து செய்தது யார்? அந்த நிதி வழங்கப்பட்ட விபரம்? போன்றவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு பிரிவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். குரும்பப்பட்டி பூங்காவுக்கு சென்றும் விசாரித்தனர். ஆத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட கருமந்துறை வனச்சரகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் மலைக்கிராம மக்களுக்கு பட்டா வழங்கியது, சாலை அமைத்தல் போன்றவற்றில் நடந்த முறைகேடு தொடர்பாக மற்றொரு வனத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் குழுவினர் விசாரணையை தொடங்கினர். அக்குழுவினர், நேற்று காலை கருமந்துறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியும், புகார் எழுந்த காலக்கட்டத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடமும் விசாரித்தனர்.


Tags : AIADMK ,Salem, ,Karumanturai , During the AIADMK rule, a team of vigilance officers investigated the complaint of malpractices in forest department projects in Salem, Karumanturai: documents were seized from the office of the district forest officer.
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...