×

நெல்லையில் ரூ.370 கோடியில் மேற்கு புறவழிச்சாலை திட்டம்

நெல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நெல்லை மக்களுடைய  நீண்டகால கோரிக்கையான நெல்லை மாநகர மேற்கு புறவழிச் சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பின், ரூ.370 கோடி மதிப்பீட்டில் மூன்று கட்டங்களாக, நெல்லை மாநகரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படும். இத்தகைய சிறப்பான பணிகளைத்தான் மாதம்தோறும்,  வாரம்தோறும், ஏன் தினந்தோறும் தொடங்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகம், இந்தியாவிலே முதன்மை மாநிலமாக விளங்கவும் நகர்ப்புற மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறப் பகுதிகளிலும், தொழில்முனைவோர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (டான்சிம்) மூலம் மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், வட்டார புத்தொழில் மையங்கள் அமைக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மாவட்ட கிளப்பில், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட புத்தாக்க மையத்தின் கீழ், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் மையமாக இது செயல்படும். அதேபோல, கல்லூரிகளுக்குச் சென்று வேலைவாய்ப்பு, தொழில் உருவாக்கம், மற்றும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

* அரங்குகளை பார்வையிட்ட முதல்வர்
விழா மேடை அருகே நெல்லை மாவட்டத்தை சிறப்பிக்கும் கண்காட்சி அரங்குகள், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பாளை மேடை போலீஸ் ஸ்டேஷன், வ.உ.சி விளையாட்டு மைதானம், சோலார் மின்திட்டம் போன்றவைகளின் மாதிரிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நெல்லை கைவினை பொருட்கள் கண்காட்சி அரங்கும், வேளாண்மை, தோட்டக்கலை துறை சார்பான கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் காய்கனிகள் மூலம் மயில் உள்ளிட்ட பல்வேறு அழகிய வடிவ சிற்பங்களாக வடிவமைத்திருந்தனர். முன்னாள் முதல்வர் கலைஞர் உள்ளிட்ட தமிழக மற்றும் நெல்லை மாவட்ட பிரபல எழுத்தாளர்களின் மார்பளவு சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Tags : Nelli , 370 Crore Western Bypass Project in Nellai
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...