2 மாதங்களுக்கு பின் எடப்பாடி வருகை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போட்டா போட்டி: ஓபிஎஸ்சும் வருவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு; மீண்டும் மோதல் உருவாகும் அபாயம் இருப்பதால் தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை: அதிமுகவில் மோதல் ஏற்பட்டு, கலவரம், கட்சி அலுவலகம் சீல் வைப்பு, நீதிமன்றத்தில் வழக்கு என 2 மாத போராட்டங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று காலை கட்சி தலைமை அலுவலகம் சென்றார். அதேநேரத்தில் தானும் தலைமை அலுவலகம் செல்ல இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் போலீசில் மனு கொடுத்துள்ளதால், இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவில் தற்போது 4 அணிகள் உருவாகியுள்ளது. அதில் முக்கிய அணிகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் இயங்கும் அணிகளாகும்.

இரு தரப்பினரும் அதிமுக தங்களுக்குத்தான் என்று கூறி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி நான்தான் தற்காலிக பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து நீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்காததால், நான்தான் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர். தேர்தல் ஆணையம்தான் அதிமுக குறித்து முடிவு எடுக்க முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அதேசமயம், கடந்த ஜூலை 11ம் தேதி  எடப்பாடி ஆதரவாளர்கள் அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டினர். இதில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதாக முடிவு  செய்து அறிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். கலவரம் ஏற்பட்டது. கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டது. மேலும், இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், சுமார் இரண்டு மாதங்களாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிசாமி வராமலே இருந்தார். இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக நேற்று காலை 11.35 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.

அங்கு, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜூலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில்,  தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  அவரது இல்லத்தில் இருந்து கட்சி அலுவலகம் வரை அதிமுகவினர்  மேளதாளம், கும்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு  அளித்தனர்.

பின்னர், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக எது இருக்குதோ அதை எடுத்துக் கொள்வார். பச்சோந்தி மாதிரி, நேரத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்வார். இன்னும் சொல்லப்போனால் பச்சோந்தியைவிட மோசமானவர். சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்  ஓ.பன்னீர்செல்வம். கட்சிக்கு எப்போதும் அவர் விசுவாசமாக இருந்தது இல்லை’’ என்றார்.

பின்னர் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். எடப்பாடி கட்சி அலுவலகம் வருகையால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக தலைமை அலுவலகம் வந்ததால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் வரலாம் என்ற வதந்தி பரவியதால் அசம்பாவிதத்தை தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அதேநேரத்தில் ஓபிஎஸ்  ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, டிஜிபி சைலேந்திரபாபுவை நேற்று காலை சந்தித்து, அதிமுக அலுவலகம் தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணை நடந்து வருவதால், எடப்பாடி பழனிசாமியை அதிமுக அலுவலகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது  புகார் மனு அளித்தார்.

அதேநேரத்தில், அதிமுக வழிகாட்டி குழு உறுப்பினரும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளருமான ஜெ.சி.டி.பிரபாகர் நேற்று சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அதிமுக அடிப்படை தொண்டர்களால் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் மூலம் 6.12.2021 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், 11.7.2022 அன்று காலை 8.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அங்கு குவிக்கப்பட்டிருந்த ரவுடிகள், குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அதனை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதி, சீல் வைத்த உத்தரவை ரத்து செய்ததோடு, கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். மேலும், கட்சி தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சென்று, கட்சி பணிகளை ஆற்றிட எந்தவித சட்ட தடையும் இல்லை. எனவே எதிர்வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் செல்லும்போது அவரை வரவேற்க அதிகப்படியான தொண்டர்கள் கூடும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கலவரம் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

எனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்), மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் வந்து செல்ல எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள எம்ஜிஆர் மாளிகைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகம் வந்து சென்றுள்ளநிலையில் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி அலுவலகம் வர முடிவு செய்துள்ளதால், மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

* பதவி வெறியில் எடப்பாடி

ஜெ.சி.டி.பிரபாகர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கொடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சிலரோடு ஒப்பந்தம் வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து, கட்சியை பலவீனப்படுத்த எடப்பாடி முயற்சி செய்கிறார். இதற்கான ஆதாரங்களை விரைவில் நாங்கள் வெளியிடுவோம். எடப்பாடி கட்சி அலுவலகத்தில் நேற்று கூட முன்னணி தலைவர்களை தன்னுடன் அமர செய்யாமல், பொதுமக்கள் உட்காரும் வரிசையில் உட்கார வைத்ததால் பல நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்வதற்கு ஒருநாள் முன் காவல் நிலையத்தில் சொன்னால், பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு நான் தான் என்று எடப்பாடி பதவி வெறியில் மிதந்து கொண்டிருக்கிறார்” என்றார்.

Related Stories: