×

தேர்தல் விதி மீறல் வழக்கு: நடிகர் வையாபுரி விடுவிப்பு

போடி: தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து நடிகர் வையாபுரி விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியை ஆதரித்து நடிகர் வையாபுரி பிரசாரம் செய்தார். தேனி மாவட்டம், போடி புதூர் பகுதியில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தி, அங்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தட்டில் பணம் வைத்து வையாபுரி கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தல் விதிமீறலுக்காக போடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போடி ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய உத்தரவால் வழக்கும் தொடரப்பட்டது. அதன்பின், கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பியும் நடிகர் வையாபுரி ஆஜராகாமலேயே இருந்து வந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக போடி நீதிமன்றம் வையாபுரிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி, வையாபுரி போடி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக ஆஜராகி, பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டு சென்னை திரும்பினார். இவ்வழக்கு விசாரணைக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் வையாபுரி ஆஜரானார். வையாபுரி மீது குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இல்லாத காரணத்தால், இந்த வழக்கில் இருந்து அவரை உடனடியாக விடுதலை செய்வதாக குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Vayapuri , Election violation case: Actor Vayapuri acquitted
× RELATED கரூர், கோவை சாலையில் டிராபிக் போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்