கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூரில் நாச்சியம்மன் கோயில் தூக்கு தேர் திருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்கு தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தூக்கு தேர்திருவிழா நடத்த ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நாள்தோறும் நாச்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தினந்தோறும் வழிபாடு செய்து வந்தனர். நேற்று பக்தர்கள் அங்க பிரதட்ஷனம், அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவில் செண்டை மேளம் தாளம் முழங்க தூக்கு தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை தோளில் சுமந்தப்படி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.

இந்த தேர்திருவிழாவில் பெரியசிறுவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாச்சியம்மன் தாலாட்டு நிகழ்ச்சியுடன் கோயில் திருவிழா முடிவடைந்தது. இதேபோல் கள்ளக்குறிச்சி புத்தந்தூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 3 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். அதனை தொடர்ந்து மாலை 6 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது.

Related Stories: