×

டிரைவர் லைசென்ஸ் பெறுவதில் புதிய நடைமுறைகள் அமல்

வேலூர்: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிரைவர் லைசென்ஸ் பெறுவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், பழகுனர் உரிமம், வாகனங்களுக்கு ஆர்.சி. தகுதிச்சான்று, பர்மிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளுக்கு  இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. டிரைவர் லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வு மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடந்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் அலைச்சல் இன்றியும், விரைவாகவும் பணியை முடிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டிரைவர் லைசென்ஸ் பெறுவதற்கான தேர்வு தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கணினி முறையில் அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. தற்போது அனைத்து ஓட்டுநர் உரிமத் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்த வேண்டும். வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த தேர்வுகளுக்கு கணினி மூலமாக முன்பதிவு செய்திட ஏதுவாக பொதுமக்கள் தங்களது வசதிக்கு ஏற்ப நாள் மற்றும் நேரத்தினை தேர்ந்தெடுத்து கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும்.

செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த புதிய உத்தரவுப்படி அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து பகுதி வாகன மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி தேர்வு நடத்தி டிரைவர் லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Amal , New Procedures for Obtaining Driver's License
× RELATED இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 84 பேர் பலி