×

கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்; நஷிம் ஷா சிக்சர் ஜாவித் மியான்டட்டை நினைவுபடுத்தியது: கேப்டன் பாபர்அசாம் நெகிழ்ச்சி

துபாய்: ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்று நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ஜசாய், குர்பஸ் இருவரும் துவக்கம் முதலே காட்டடி அடிக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஆப்கானிஸ்தான் முதல் 3.2 ஓவர்களில் 35 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து ஹரிஸ் ராஃப் அபாரமாக பந்துவீசி குர்பஸ் 17 (11) விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து ஜசாயும் 21 ரன்னில் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சில் கரீம் ஜனத் 15, நஜிபுல்லா 10, முகமது நபி 0 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த இப்ராஹிம் ஜார்டனும் 35 (37) அவுட்டானார். இறுதியில் ரஷித்கான் 15 பந்துகளில் 18 ரன்களை சேர்த்தார். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் வீரர்களும் ஆப்கானிஸ்தான் பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சில் திணறினர். பாபர் அசாம் பரூக்கி பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட் ஆனார். பக்கர் ஜமானும் 5 ரன்னில் அவுட்டார்.

இதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் 20 (26), இப்திகார் அகமது 30 (33), சதாப்கான் 36 (26) ஆகியோர் மிடில் ஓவர்களில் நிதானமாக ஆடி அவுட் ஆகினர். தொடர்ந்து நவாஷ் 4 ரன், குஷ்டிலும் 1 ரன்னில்  அவுட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது அகமது மாலிக் பந்துவீச்சில் ஹரிஸ் ராப் கோல்டன் டக் அவுட் ஆனார். ஆசிப் அலியும் 16 (8) அந்த ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து ஆட்டமிழந்தார். இதனால், கடைசி ஓவரில் 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் இறங்கிய இளம் வீரர் நஷிம்ஷா, பரூக்கி பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி வெற்றியை வசப்படுத்தினார். பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை சேர்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிவிட்டன.

வெற்றிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் “உண்மையைச் சொல்வதென்றால், டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றமான சூழல் இருந்தது. கடந்த சில ஆட்டங்களைப் போல எங்களால் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முடியவில்லை. ஆனால் நஷிம் ஆட்டத்தை முடித்த விதம் அருமை. ரஷித், முஜீப் மற்றும் நபி சிறந்த பேட்டர்கள். எனவே அவர்களுடன் யாராவது வாய்ப்புகளை எடுக்க வேண்டும். அதையும் ஆழமாக எடுத்துச் செல்லவேண்டும் என்பதே முக்கிய திட்டம். நாங்கள் பந்துவீச்சைத் தொடங்கிய விதம் சிறப்பாக இருந்தது. நாங்கள் அவர்களை 130 ரன்னுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம்.

அந்த கடமையை பந்து வீச்சாளர்கள் நிறைவேற்றினர். எங்களது அணியிலும் சரியான பார்ட்னர்ஷிப் இல்லாததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை நெருங்கியது. நான் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தாலும் மனதின் பின்பகுதியில் கிரிக்கெட்டையே நினைத்தேன். நஷிம் முதல் ஷாட்டை ஆடியதும் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. அடுத்த சிக்சரில் வெற்றி வசப்பட்டது. இது எனக்கு ஷார்ஜாவில் ஜாவித்மியான்டட் அடித்த சிக்ஸரை நினைவுபடுத்தியது. இதே உத்வேகத்தை நாங்கள் தொடர விரும்புகிறோம், எங்கள் தவறுகளை திருத்திக்கொள்வோம். அடுத்த ஆட்டம் ஒரு புதிய ஆட்டமாக இருக்கும்” என்றார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி கூறுகையில் “இளம் வீரர்கள் பந்துவீச்சிலும், களத்திலும் சிறந்து விளங்கினர். ஆனால் மீண்டும் நாங்கள் சரியாக முடிக்கவில்லை. இறுதியில் எங்கள் நரம்புகளைக் கட்டுப்படுத்தவில்லை. எந்த நிலையிலும் நாங்கள் கைவிடவில்லை. 130 ரன்களை துரத்துவது கடினமானது என்றுதான் நாங்கள் நினைத்தோம். நாங்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஸ்லோயர் மற்றும் யார்க்கர் என இரண்டு விருப்பங்களை வழங்கினோம். துரதிர்ஷ்டவசமாக தேவைப்படும்போது அதை செயல்படுத்த முடியவில்லை. நாளை (இன்று) இந்தியாவுடன் சிறப்பாக விளையாடுவோம். அன்பாக ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

Tags : Pakistan ,Afghanistan ,Nashim Shah ,Javid Miandad ,Captain Babar Azam , Pakistan entered the final after defeating Afghanistan in the last over; Nashim Shah's six reminded Javid Miandad: Captain Babar Azam was resilient
× RELATED மாணவர்கள் அமைப்பினர் தீவிரம்...