திருச்சி முகாம் சிறையில் தூக்க மாத்திரை தின்று வெளிநாட்டு கைதிகள் தற்கொலைக்கு முயற்சி

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாமில் இந்தோனேஷியா, இலங்கை, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை தமிழர்கள் மட்டும் 108 பேர்  உள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ ஹெராயின் கடத்திய விவகாரத்தில் பிடிபட்டவர்களுக்கும், திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், அமலாக்க துறையினர் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் சிறப்பு முகாமில் சோதனை நடத்தி கைதிகளிடம் இருந்து 60 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில் தங்களிடம் இருந்து போலீசார் பறித்து சென்ற செல்போன்களை திருப்பி தர வேண்டும். விரைவில் எங்களை விடுவிக்க வேண்டுமென சிறப்பு முகாமில் உள்ள 13 பேர் நேற்று மாலை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். சிறப்பு முகாம் சிறை அதிகாரிகள் சென்று 13 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் திருச்சி சிறப்பு முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: