×

திருத்தணியில் சரளை கற்களால் புழுதி பறக்கும் சாலைகள்: சீரமைக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருத்தணியில் அரக்கோணம், சித்தூர் மற்றும் பைபாஸ் சாலையின் மேற்பகுதி பெயர்ந்து, குவிந்து கிடக்கும் சரளை கற்களால், அங்கு வாகனங்கள் விரைந்து செல்லும்போது மண் புழுதி பறக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த சாலையை மீண்டும் தரமான முறையில் சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலை, சித்தூர் சாலை மற்றும் பைபாஸ் சாலை உள்பட பல்வேறு பகுதி சாலைகளை மாநில நெடுஞ்சாலை துறை பராமரித்து வருகிறது. தற்போது மேற்கண்ட சாலைகளில் தரமற்ற நிலையில் தார்சாலை போடப்பட்டு இருந்ததால், அதன் மேற்பகுதி பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறி, சாலை முழுவதும் சரளை கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அவ்வழியே வாகனங்கள் அதிகளவு செல்லும்போது மண்புழுதி பறக்கிறது.

இதைத் தொடர்ந்து, பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் பின்புறமாக இருசக்கர வாகன ஓட்டிகள் வரும்போது மண்புழுதி பறப்பதால் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள ஓட்டல்கள், டீக்கடைகளில் வைக்கப்பட்டு இருக்கும் உணவு பண்டங்களின்மீதும் மண் புழுதி படர்கிறது. இதனால் அவை கெட்டு போகின்றன. இவற்றை உண்ணும் பலருக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது.

எனவே, திருத்தணி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை மீண்டும் தரமான முறையில் சீரமைக்கவும், அங்கு தேங்கி கிடக்கும் சரளை கற்களை உடனடியாக அகற்றவும் சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Tiruthani , Dirt-strewn gravel roads in Tiruthani: Urge to repair
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து