×

பயோ மைனிங் திட்டத்தில் 32,240 டன் குப்பை கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டது: பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சியில் பயோ மைனிங் திட்டத்தின் மூலம் 32,240 டன் குப்பையை பிரித்து அப்புறப்படுத்தி உள்ளனர். குப்பை கிடங்கை முற்றிலும் காலியாக்கி, நுண் உர கிடங்கு அமைக்கும் திட்டத்திற்கு, தமிழக அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கோட்டைகாடு குப்பை கிடங்கில், கடந்த 25 ஆண்டுகளாக நகராட்சி பகுதியில் சேகரிப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

பகல் நேரங்களில் காய்ந்து கிடக்கும் குப்பைகள், இரவு நேரங்களில் திடீரென தீப்பற்றி எரியும். இந்த குப்பைகளில் இருந்து கிளம்பும் நச்சுப்புகையால் அருகில் உள்ள ஆவத்திபாளையம், கோட்டக்காடு பகுதி மக்களுக்கு மூச்சு முட்டும். கதவு ஜன்னல்களை இறுக மூடி காலம் தள்ளிய மக்கள், இந்த புகையின் வீச்சு தாங்காமல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். எரியும் தீயை அணைக்க ஈரோட்டில் இருந்து பல முறை தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர்.

இதையடுத்து அடிக்கடி ஏற்படும் தீவிபத்தை தடுக்க சிறப்பு ஏற்பாடாக, குப்பை கிடங்கிலேயே, டேங்க் மற்றும் குழாய்கள் அமைத்து தண்ணீர் நிரப்பி, தீயை அணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், மலைபோல தேங்கிய குப்பை கழிவு பிரச்னை, நகராட்சி நிர்வாகத்திற்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்தும் பயோ மைனிங் திட்டம், நகராட்சியில் அமல் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மலையாக தேங்கியிருந்த குப்பைகளை, இயந்திரங்கள் மூலம் தோண்டி, பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து, கண்ணாடி மற்றும் ஆணி உள்ளிட்ட இருப்பு பொருட்கள் சலித்து பிரிக்கப்பட்டது.

இதில் சேகரமான பிளாஸ்டிக் கழிவுகள் மூட்டைகளாக கட்டப்பட்டு, வெளி மாவட்டங்களில் உள்ள சிமெண்ட் ஆலைக்கும், பிரிக்கப்பட்ட கட்டிட கட்டுமான குப்பை கழிவுகள், மேடுபள்ளங்களை நிரப்பும் மண்ணாகவும் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட பயோ மைனிங் திட்டத்தால், இங்கிருந்த 32,240 டன் (40 ஆயிரம் கனஅடி) குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு, தரைமட்டத்திற்கு வந்தது. தற்போது குப்பைகளை ஆய்வு செய்த அண்ணா பல்கலைகழக நிபுணர்கள் குழு, தரைமட்டத்திற்கு கீழ், மேலும், 11,000 டன் (14 ஆயிரம் கனஅடி) குப்பைகள் இருப்பதாக கணக்கிட்டுள்ளது. இந்த குப்பைகளையும் அப்புறப்படுத்தும் பணியில் பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

குப்பைகளை கரைத்தபின் நகராட்சிக்கு 1.16 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. இந்த இடத்தில் 11 ஆயிரம் டன் குப்பைகளை அப்புறப்படுத்தினால், இங்கு நுண் உரக்கிடங்கு அமைத்து, நகராட்சியின் குப்பைகளை உரமாக்கி, விளை நிலங்களுக்கு உரமாக்கும் திட்டத்திற்கு, நிர்வாக ஒப்புதல் கேட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும், நகராட்சி நிர்வாகம் எதிர்நோக்கியுள்ளது.நுண்ணுரக்கூடம் திட்டம் அமலாக்கப்பட்டால், பள்ளிபாளையம் நகராட்சி குப்பைகள் மட்டுமல்ல, அருகில் உள்ள ஊராட்சிகளின் குப்பைகளும், இங்கு உரமாக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். இனிவரும் காலங்களில் குப்பை பிரச்னை நகராட்சியின் சுமையாக இருக்காது. நகராட்சியின் வருவாயை மேம்படுத்தும் வரவாக இருக்கும்.

பயோ கேஸ் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்
பள்ளிபாளையம் நகராட்சி குப்பை கிடங்கில் பயோ கேஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதிகளில் இயங்கும் உணவங்களில் மீதமான உணவுகள், சந்தையில் கழித்து போடப்படும் காய்கறிகள், இலை தலைகளை சேகரித்து, இங்குள்ள இயந்திரத்தில் அரைத்து, பதப்படுத்தி, அதில் இருந்து பயோகேஸ் உருவாக்கி, இந்த பயோகேஸை எரித்து இயந்திரத்தை இயக்கி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு, குப்பை கிடங்கில் உள்ள மின் மோட்டார்களை இயக்கவும், மின் விளக்குகளை எரிய வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரம் தயாரிப்பது ஒருபுறம் என்றாலும், எளிதில் மக்கும் காய்கறி, உணவு கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி, குப்பைகளை குறைக்கும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளது. சோதனை ஓட்டமாக சிறிய அளவில் இயங்கி வரும் இந்த திட்டதை விரிவுபடுத்தி, நகராட்சியின் மின் விளக்குகளை முழுமையாக பிரகாசிக்க செய்ய வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Administration Action , Bio-mining project, 32,240 tonnes of waste, Pallipalayam Municipality
× RELATED மாவட்டத்தின் பெருமைகளை...