×

அதிமுக ஆட்சியில் கவனிக்கப்படாத சோத்துப்பாறை அணை தூர்வாரப்பட வேண்டும்: தமிழக அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம்: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால், அணையில் அதிகளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வரும் தமிழக அரசு, அணையை தூர்வாரினால் அதிகளவில் நீரை தேக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக ரம்யமான சூழ்நிலையில் 126 அடி உயரத்தில் இந்த அணை கட்டப்பட்டது. 1982ம் ஆண்டில் இந்த அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் துவங்கப்பட்டது. ஆனால் அப்போதைய அதிமுக அரசு பல்வேறு காரணங்களை கூறி இந்த அணையின் கட்டுமான பணிகளை கண்டுகொள்ளவில்லை. அதனால், மிகவும் தொய்வடைந்த நிலையில் பணிகள் நடைபெற்று 20 சதவீதம் பணிகள் கூட நடைபெறவில்லை. அதன்பின் திமுக ஆட்சியில் 1997ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1996ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அணைப்பகுதிக்கு வந்து அணையினை மேற்பார்வையிட்டு அணையின் பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டார். அதன்பேரில், அணை பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, 2001ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் இப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாய், தாமரைக் குளம் கண்மாய், பாப்பையன்பட்டி கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்கள் வழியாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரை பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையில் இருந்து பெரியகுளம் பகுதி மக்களுக்கு குடிநீருக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணையை விரைந்து முடித்த பொழுது இந்த அணையில் இருந்து எடுக்கப்பட்ட மணல் அனைத்தும் அணையின் ஓரங்களிலேயே குவித்து வைக்கப்பட்டு, அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.

இதனால், மழைக்காலங்களில் இநத மணல் முழுவதும் மீண்டும் அந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் தங்கி விட்டது. இதனால் ஏற்கனவே 100 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், மேலும் இந்த குவிக்கப்பட்டிருந்த மணல் மூடி நீர்ப்பிடிப்பு பகுதி அளவு குறைந்தது. இதனால், சிறிய மழை பெய்தாலே அணை நீர் நிரம்பி வழிய துவங்கிவிடும். அதனால், அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வழிந்து வெளியேறி விடுகிறது. இதனால் அணையில் அதிக அளவு தண்ணீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய அளவில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இந்த அணையை கண்டுகொள்ளவே இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, இந்த அணையினை முறையாக தூர்வாரி மழைநீரை அதிக அளவில் தேக்கி விவசாயத்திற்கு தேவைப்படும் பொழுது அதனை திறந்து விட்டு பாசனத்திற்கு பயன்படும் அளவிற்கு செய்ய வேண்டும் என தமிழக அரசிடமும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அன்புக்கரசன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள உயரமான அணைகளில் ஒன்றாக சோத்துப்பாறை அணை இருக்கிறது. ஆனால், இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மிகவும் குறைந்த அளவே உள்ளது. வருடம் முழுவதும் பெரியகுளம் பகுதி மக்களுக்காக இந்த அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது. மேலும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவதால் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை தமிழக அரசு விரைந்து செய்து கொடுத்தால், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுவார்கள், என்றார்.

இப்பகுதி விவசாயி ராஜா கூறுகையில், சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் தண்ணீரை நம்பியே, இப்பகுதியில் நெல், கரும்பு, மா, தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் நடந்து வருகிறது. ஆனால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் தேங்கியிருப்பதால், அதிகளவில் மழைநீரை தேக்க முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, தமிழக அரசு இந்த அணைப்பகுதிய முறையாக தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கலைஞரால் கட்டப்பட்ட அணையை இயற்கை அன்னை திறந்து வைத்தது
1996ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை கட்டி முடிக்க ரூ.29 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். மேலும், நேரில் வந்து பார்வையிட்டு அணை கட்டுமான பணிகளை துரிதப்படுத்தினார். இதன் காரணமாக 2001ம் ஆண்டு அணையின் கட்டுமான பணி முழுமையாக முடிவடைந்தது. அணை திறப்பு விழா காணும் முன்பாக 2001ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சி வந்தது. இதில் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார்.

அப்போது சோத்துப்பாறை அணை திறப்பு விழா காணாத நிலையில், நவம்பர் மாதம் அணையின் கொள்ளளவு முழுமையாக நிரம்பி அணையின் மேல் இருந்து தண்ணீர் தானாக முதல்முறையாக வழிந்தோடி வெளியேறியது. திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணையை இயற்கை அன்னையே திறந்து வைத்தது. இதனையடுத்து அணையின் நீர் வழிந்தோடிய மறுநாள் அப்போதைய கலெக்டராக இருந்த அப்துல் ஆனந்த் சோத்துப்பாறை அணையின் கீழ் பகுதியில் 2 கிமீ தொலைவில் உள்ள கால்வாய் மதகுப் பகுதிக்கு வந்து கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்தார்.

Tags : Chothupparai Dam ,AIADMK ,Tamil Nadu Govt , AIADMK regime, Sothuppara dam, Farmers demand from Tamil Nadu government
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...