×

எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிற்கவில்லை கானல்நீரான உளுந்தூர்பேட்டை ரயில்நிலைய விரிவாக்கம்: பல ஆண்டு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டதால் பயணிகள் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இதனால் உளுந்தூர்பேட்டை வழியாக பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கடந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது.  இதே போல் சென்னை முதல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்பாதையிலும் மையப்பகுதியாக இருப்பது உளுந்தூர்பேட்டை. இதனால் உளுந்தூர்பேட்டை வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து 40க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி சரக்கு ரயில்களும் தினந்தோறும் சென்று வருகின்றன. அனைத்து வழித்தடங்களிலும் நின்று செல்லும் பயணிகள் ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்று வருகிறது.

இந்த சாதாரண கட்டணம் பயணிகள் ரயில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வரையில் சென்று வரும் பயணிகள் ரயில் மட்டும் காலையில் ஒருமுறையும், மாலை நேரத்தில் ஒருமுறையும் நின்று செல்கிறது. மற்ற ரயில்கள் எதுவும் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மும்பை, டெல்லி, குஜராத், பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது பகுதிகளுக்கு ரயில் மூலம் வந்து செல்ல வேண்டும் என்றால் விழுப்புரம் அல்லது விருத்தாசலம் ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து தான் ரயில்களில் சென்று வருகின்றனர்.

இதே போல் வியாபாரிகள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான சரக்கு பொருட்களை வாங்கி வருவதற்கு விருத்தாசலம் மற்றும் விழுப்புரம் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு அந்த பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் நின்று செல்லும் நிலையில் முக்கிய நகரப்பகுதியாக விளங்கிவரும் உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் சார்பில் பல கட்ட கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவில்லை.

இது குறித்து கடந்த பல ஆண்டுகாலமாக ஐந்திற்கும் மேற்பட்ட எம்பிக்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் மட்டும் தெரிவித்து வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றாலும் இதுவரையில் ரயில்கள் நிற்பதற்கு எதுவும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் முன்னாள் எம்பிக்கள் தன்ராஜ், ஆனந்தன், ராஜேந்திரன், காமராஜ், தற்போதைய விழுப்புரம் எம்பி ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் உளுந்தூர்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை பேசியும், இதுவரையில் எந்த பலனும் இல்லை.

உளுந்தூர்பேட்டை நகர் ரயில்நிலையம் வழியாக சென்னை முதல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஏராளமான ரயில்கள் சென்று வந்தாலும், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பது என்பது பகல் கனவாகவே இருந்து வருகிறது. இது மட்டுமின்றி ரயில் நிலைய விரிவாக்கம் செய்யும் பணியும் கானல் நீராகவே இருந்து வருகிறது. உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ஏதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலாவது நிற்க வேண்டும் என கடந்த காலங்களில் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தனித்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மான நகல்கள் மத்திய ரயில்வே துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்காமல் மக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குப்பை தொட்டிகளில் கிடக்கும் அவல நிலை உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின் சார்பில் பல கட்ட போராட்டங்கள், வியாபாரிகள்  சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம்  உள்ளிட்ட சமூக அமைப்புகளின் சார்பில் ஒன்றிய அரசுக்கும், ரயில்வே துறை  அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை  கடிதங்கள் அனுப்பியும் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்  இதுவரையில் நிற்கவில்லை.

உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும்  மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து  தரப்பு மக்களும் கடும் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில்  பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில்  எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காத சம்பவம் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என தெரிகிறது.

உளுந்தூர்பேட்டை-கள்ளக்குறிச்சி புதிய ரயில்பாதை கைவிடப்பட்டதால் மேலும் அதிர்ச்சி
உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் காமராஜ் கூறியபோது, உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில்வே பாதை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் ஒரு கட்டமாக உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி வரையில் ரயில்பாதை அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் ஆரம்பித்தாலும் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும் நிலை ஏற்படும், ஆனால் தற்போது இந்த திட்டமும் கைவிடப்பட்டதாக தெரிகிறது.

உளுந்தூர்பேட்டையில் இருந்து கெடிலம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளதாக தெரிகிறது. இது போல் முக்கிய நகரமாக விளங்கி வரும் உளுந்தூர்பேட்டையின் வளர்ச்சியை தடுப்பதற்காக தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

Tags : Kanalneera Ulundurpet , Express train, Ulundurpet railway station expansion, a multi-year demand,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிற்கவில்லை...