பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை: காவலாளி வைத்திருந்த அரிசியை ருசித்தது

கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் காட்டு யானை புகுந்தது. கோவை மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் அங்குள்ள தோட்டம், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது நுழைவாயில் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை வந்துள்ளது.

அந்த யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி, மாவு ஆகியவற்றை தரையில் தூக்கி போட்டு ருசித்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். டார்ச் லைட் அடித்தும், சத்தம் எழுப்பியும் யானையை மருதமலை அடிவாரப்பகுதிக்கு விரட்டினர். மேலும், யானை கவலாளி அறையில் இருந்த அரிசியை ருசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

மருதமலை அடிவாரப்பகுதி, பாரதியார் பல்கலைக்கழகம் பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் மருதமலை சாலையை பயன்படுத்த வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், யானை நடமாட்டம் குறித்த தகவலறிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காட்டு யானை நுழைந்த சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: