×

ஆற்காட்டில் பஸ் படிக்கட்டு, ஏணியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆற்காடு:  பஸ்சின் படிக்கட்டிலும் ஏணியிலும் தொங்கியபடி ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணிப்பதால் செல்வதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிகளில்  தொங்கியபடி செல்லும் மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பயணிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் தொடர்ந்து மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பஸ்களின் படிகளில் தொங்கியபடியும், ஏணியில் தொங்கியபடியும் பயணம் செய்யும் நிலை உள்ளது.

இந்நிலையில் ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா சிலை மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிக்கட்டில் இரண்டு பக்கமும் அதிக அளவு மாணவ மாணவிகளும் பொதுமக்களும் வயது வித்தியாசமின்றி தொங்கியபடி செல்கின்றனர். சில நேரங்களில் படிகளில் தொங்கியபடி செல்லும்போது பேலன்ஸ் இல்லாமல்  கீழே விழுந்து படுகாயம் அடையும் அபாயம்  ஏற்படுகிறது.

 அதேபோல் நேற்று ஆற்காட்டில் இருந்து திமிரி வழியாக ஆரணி சென்ற தனியார் பேருந்தில் படிக்கட்டில் இரண்டு பக்கமும் அதிக அளவு பயணிகள் தொங்கியபடி சென்றனர். மேலும் பஸ்ஸின் பின்புறம் உள்ள ஏணிகளிலும் ஆபத்தான நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொங்கியப்படி சென்றதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை பற்றி கொஞ்சமும்  கவலைப்படாமல் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆபத்தை உணராமல் பஸ்களின் படிகளில் தொங்கியபடியும், ஏணிகளில் தொங்கியபடியும் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Arcot , Bus stairs, students hanging from ladders, dangerous travel, public demand
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...