அரியலூர் அருகே சகோதரி திருமணத்திற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்: சரமாரி வெட்டிக்கொலை

தா.பழூர்: அரியலூர் அருகே சகோதரி திருமணத்திற்கு வந்த சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயிலை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு மாரியப்பன், சாமிநாதன் என 2 மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் சாமிநாதன் (35), சென்னை உயர்நீதிமன்ற வக்கீலாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தையல்நாயகிக்கு, அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே  அணைக்குடம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது.

சகோதரி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தா.பழூருக்கு வந்த சாமிநாதன், திருமண மண்டபம் அருகே இருந்த கடைக்கு டீ சாப்பிட சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக கழுத்து பகுதியில் அரிவாளால் வெட்டினர். இதில் சேரில் அமர்ந்திருந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சாமிநாதன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: