பாகிஸ்தான் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் திணறல்

ஷார்ஜா: ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன் மட்டுமே எடுத்தது. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் ஆப்கானிஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.4 ஓவரில் 36 ரன் சேர்த்தது. குர்பாஸ் 17 ரன், ஹஸ்ரதுல்லா 21 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஒரு முனையில் இப்ராகிம் ஸத்ரன் உறுதியுடன் போராட... கரிம் ஜனத் 15 ரன், நஜிபுல்லா ஸத்ரன் 10 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் முகமது நபி சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறியது, ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. இப்ராகிம் ஸத்ரன் அதிகபட்சமாக 35 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹரிஸ் ராவுப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் ரஷித் கான் 2 பவுண்டரி, 1 சிக்சர் பறக்கவிட... ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. அஸ்மதுல்லா உமர்ஸாய் 10 ரன், ரஷித் கான் 18 ரன்னுடன் (15 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 2, நசீம் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், ஷதாப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

Related Stories: