×

மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா காந்தி சிலை மாற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை மெட்ரோ பணிக்காக, தற்போது உள்ள இடத்திலிருந்து தற்காலிகமாக மாற்றப்பட உள்ளதால், மாற்று இடத்தை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2ம் கட்ட பணியான மெட்ரோ ரயில் திட்டம் கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26 கி.மீ தூரம் அமைய உள்ளது. போரூர், பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளிலிருந்தும், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் மெரினாவுக்கு நேரடியாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் வகையில் அமைகிறது.

 காமராஜர் சாலையில் உள்ள கலங்கரைவிளக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் நிலையம், சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான சோதனை நடந்து வருகிறது. இதனால், காந்தி சிலை அருகில் உள்ள பகுதியில் மண் பரிசோதனை மற்றும் நிலத்தடியின் தரம் உள்ளிட்டவை கண்டறிவதற்காக ஒரு கி.மீ. நீளத்திற்கு தடை செய்யப்பட்டு தற்போது பணி நடந்து வருகிறது. மேலும் மகாத்மா காந்தி சிலை உள்ள இடம் சென்னை மாநகராட்சியின் கீழ், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணியானது நடந்து வருவதால் காந்தியின் சிலையை தற்போது உள்ள  இடத்திலிருந்து தற்காலிகமாக மாற்றப்படுகிறது.


Tags : Marina Gandhi , Alteration of Marina Gandhi statue for metro rail work
× RELATED டாஸ்மாக் கடைகளை மூட கோரி காந்திசிலை...