×

பாலியல் வழக்குகளில் கைதாகும் டீன்ஏஜ் வயதினருக்கு கவுன்சலிங்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பாலியல் வழக்கில் கைதாகும் டீன் ஏஜ் வயதினருக்கு கவுன்சலிங் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கந்தன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் மகன் லட்சுமணன், ராஜபாளையம் போலீசாரால் போக்சோ வழக்கில் கைதானார். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இதை ரத்து செய்து, விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: குண்டர் சட்டம் தொடர்பான உத்தரவு நகல் 3 நாள் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனு அரசால் 21 நாள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் மகனை குண்டர் சட்டத்தில் கைது செய்த விருதுநகர் கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் தற்போது பெரும் சவாலாய் மாறியுள்ளது. டீன் ஏஜ் வயதினரின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனுதாரர் மகனுக்கு 18 வயதும், மற்றவர்கள் சிறுவர்களுமாய் உள்ளனர்.

புத்தகத்தை கையில் சுமக்க வேண்டிய இவர்கள் தற்போது பாலியல் குற்றவாளிகளாகியுள்ளனர். செல்போன் வழியே சுலபமாக பாலியல் ஆபாசத்தை பார்த்து வெளிப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இவர்களைப் போன்றவர்களை சிறையில் அடைக்கும் போது அவர்களது மனரீதியான வக்கிரத்தை போக்கிடத் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலை தமிழக அரசு உருவாக்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவருக்கும் தேவையான கவுன்சலிங் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.



Tags : iCort Branch ,Government of Tamil Nadu , Counseling for teenagers involved in sex cases: ICourt branch order to Tamil Nadu government
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...