×

கடலூர் சப்-ஜெயிலரை எரித்து கொல்ல முயன்றவர் கைதி எண்ணூர் தனசேகரிடம் மீண்டும் செல்போன் பறிமுதல்

கடலூர்: கடலூர் சப்-ஜெயிலர் குடும்பத்தை எரித்துக்கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய கைதி எண்ணூர் தனசேகரிடம் மீண்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் முதுநகர் அருகே கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு கடந்த மாதம் 8ம் தேதி சப்-ஜெயிலர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், மத்திய சிறையில் சோதனை செய்த போது அங்கு தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தனசேகரிடம் செல்போன், சார்ஜர், பேட்டரி, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து மணிகண்டன் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். மேலும் கடலூர் மத்திய சிறையில் தனசேகரனின் காவல் பணியில் ஈடுபட்டு வந்த செந்தில்குமார், கைதி தனசேகருக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்ததாக கூறப்பட்டது.

இதை கண்டித்த சப்-ஜெயிலர் மணிகண்டன், அவர் மீது உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி, மெமோ வாங்கி கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் கைதி தனசேகரனின் உதவியுடன் சப்-ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு தீ வைத்து அவரது குடும்பத்தை உயிருடன் கொல்ல முயற்சி செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் காவலர்கள் விநாயகம் மற்றும் ராஜதுரை ஆகியோர் நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையில் சோதனை செய்தனர். அப்போது கைதி எண்ணூர் தனசேகரனின் அறையிலிருந்து மீண்டும் ஒரு செல்போன் மற்றும் ஒரு பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து புகாரின்படி கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ennoor Thanasekar ,Cuddalore , Cell phone seized again from prisoner Ennoor Thanasekar who tried to burn Cuddalore sub-jailer to death
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது