×

ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி மனம் உருகி பிரார்த்தனை: காங்கிரசார் நெகிழ்ச்சி

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தி நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மனம் உருகி பிரார்தனை செய்தார். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும் 2024 நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்தும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை மேற்கொள்கிறார். 3,570 கி.மீ. தூரத்தை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை 150 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு ராகுல்காந்தி சென்றார். காலை 7.17 மணிக்கு ராஜிவ்காந்தி உருவப்படத்திற்கும், நினைவிடத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை சுற்றி பார்த்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது ராஜிவ்காந்தியின் தியாக பூமியில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு நடைபெற்ற வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் பொதுமக்களுடன் பங்கேற்றார். அப்போது அரச மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்னர் ராஜிவ்காந்தி நினைவிடத்திற்கு நேராக அமர்ந்து, நினைவிடத்தை நோக்கி அமைதியாக அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், இசைக்கப்பட்ட இசையுடன், தனது தந்தை ராஜிவ்காந்தியின் நினைவுகளை மனத்தில் உருக்கமாக அசை போட்டு கொண்டிருந்தார்.

ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவரின் மனநிலையை சித்தரிக்கும் வகையில், ராஜிவ் உருவப்படம் வரையப்பட்டு இருந்தது. அதனை உற்று பார்த்த ராகுல் காந்தி மனம் உருகி நின்றார். பின்னர் ராஜிவ்காந்தியின் நினைவிட ஊழியர்கள் மற்றும் ராஜிவ்காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து நினைவிட நுழைவு வாயில் பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றினார். பின்னர் சென்னை விமான நிலையம் திரும்பிய அவர் தனி விமானம் மூலம் நேற்று காலை 11.10 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார்.

* பிரிவினைவாத அரசியலுக்கு தந்தையை இழந்தேன், நாட்டை இழக்க மாட்டேன்: ராகுல்காந்தி டிவிட்
சென்னை: பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன். ஆனால் என நாட்டை இழக்க மாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்குவதற்காக சென்னை வந்த ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், என் நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்புணர்வை அன்பு வெல்லும், பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* 7 நதிகளில் இருந்து புனித நீர்
ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காவிரி, நர்மதா, கங்கை, கோதாவரி, யமுனா, புனித மெக்காவில் இருந்து ஜம்ஜம் நீர், இயேசு ஞானஸ்தானம் செய்த ஜோர்டான் நதியில் எடுத்த புனித நீர் என 7 நதிகளின் புனித நீர் கலசத்தில் கொண்டுவரப்பட்டு ராஜிவ்காந்தி நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

* ராஜிவ் காந்திக்கு பிடித்த மாம்பழம்
மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவாராம். அவர் இறுதியாக சாப்பிட்ட மாம்பழ வகையில் இருந்து 3 மாம்பழங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த மாம்பழங்களை ராகுல்காந்தி அங்கு வைக்கப்பட்டிருந்த வாழை இலை மீது வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags : Rahul Gandhi ,Sriperumbudur ,Rajiv Gandhi Memorial ,Congress ,Leschi , Rahul Gandhi prays at Sriperumbudur Rajiv Gandhi memorial: Congress leader
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...