வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பத்தூர், சேலம் ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்

வேலூர்: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பத்தூர், சேலம், ஆந்திர மார்க்கமாக செல்லும் பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன. இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வேலூர் மாநகரின் மத்தியில் கோட்டையின் எதிரே தியாகி உபைதுல்லா வேலூர் பழைய பஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பெருகி வரும் மக்கள் தொகைக்கும், வாகன நெரிசலுக்கும் இந்த  இடம் ஏற்றதாக இல்லை என்பதால் புதிய பஸ் நிலையம் அமைக்க செல்லியம்மன் கோயில் அருகே மூடப்பட்டிருந்த கூட்டுறவு பழத்தொழிற்சாலை வளாகம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட புதிய பஸ் நிலையம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்த நிலையில் இந்த பஸ் நிலையமும் இடநெருக்கடியை சந்தித்தது. இதனால் இதை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கேற்ப வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹53.13 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கொரோனா நெருக்கடியால் மந்த கதியில் பஸ் நிலைய பணி நடந்து வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் வேகமெடுத்தது.

பஸ் நிலைய பணிகள் 95 சதவீதம் முடிந்த நிலையில் கடந்த ஜூன் 29ம்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்துவைத்தார். அன்று முதல் சென்னை, காஞ்சிபுரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஓசூர், கேஜிஎப், குடியாத்தம், பேரணாம்பட்டு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சித்தூர், திருப்பதி மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் இயங்கத்தொடங்கின.

இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம் முழுமையான பயன்பட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அதேநேரத்தில் ஆரணி, திருவண்ணாமலை, ஆரணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன.

Related Stories: