×

சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தி புனரமைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தி புனரமைப்பது தொடர்பாக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர்  தெரிவித்ததாவது; பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட் மிகவும் பழமையான வணிக வளாக பகுதி. இங்கே காய்கறி, பழங்கள் மற்றும் மீன் மார்க்கெட் என சிறு கடைகள் உட்பட பலநூறு கடைகள் இயங்கி வருகின்றன.

காய்கறி மற்றும் பழ அங்காடி அமைந்துள்ள பகுதியானது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் மிகவும் சிறப்பு மிக்க ஒரு மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை போன்ற மார்க்கெட்டுகள் போன்று பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தும் முக்கியமான ஒரு மார்க்கெட் பகுதியாகும். மிகவும் பழமையான இந்த மார்க்கெட் கட்டடங்கள் சிதிலமடைந்து மழைக் காலங்களில் வியாபார பெருமக்களுக்கும், வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவில் உள்ளது. எனவே, இந்த மார்க்கெட் பகுதியில்  மேயர், மதிப்பிற்குரிய ஆணையாளர், மதிப்பிற்குரிய துணை மேயர் ஆகியோருடன் இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த மார்க்கெட்டை புதுப்பிப்பதற்கான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கவும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கோரப்பட்டு விரைந்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் பகுதியை தற்காலிகமாக ஏதேனும் ஒரு மைதானத்திற்கு இடமாற்றம் செய்து பணிகளை விரைந்து முடித்து இங்குள்ள வியாபாரிகள் அனைவருக்கும் அவரவர் வைத்துள்ள இடத்திற்கு ஏற்றார் போல் அதே அளவில் கடைகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1996ம் ஆண்டு வணக்கத்திற்குரிய மேயராக இருந்த பொழுது, இந்தப் பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்தரமாக சிறு கடைகளை கட்டி வழங்கினார்கள். அந்தக் கடைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பயன்படாமல் உள்ளது. அந்த இடத்தை இந்த மார்க்கெட்டிற்கு பின்புறம் அமைந்துள்ள மாநகராட்சியின் மகப்பேறு மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக வழங்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேலும் பயனுள்ள வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், 2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 1,45,988 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார்கள். இவற்றில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் 17,517 நபர்கள். தேசிய சோதனை நிறுவனத்திடம் (National Testing Agency) இருந்து தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களுக்கு மனநல  ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் துறை இயக்குனரகத்தில் இருந்து 50 மனநல ஆலோசகர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 110 உதவி எண்ணில் இருந்து 60 மனநல ஆலோசகர்களும் என மொத்தம் 110 மனநல ஆலோசகர்களைக் கொண்டு 1,45,988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளில் 564 மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொடர்ச்சியான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. 98 மாணவர்கள் மாவட்ட மனநல ஆலோசனை குழுவினால் கண்டறியப்பட்டு அவர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12:00 மணி அளவில் வர உள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட மனநல ஆலோசகர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களையும் தங்களின் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து மன அழுத்தத்தில் உள்ள மாணவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட மனநல ஆலோசகர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தகவல் பெறும் பட்சத்தில் இந்தக் குழுவானது சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது பெற்றோர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி தொடர்ந்து கண்காணிப்பார்கள். நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அடுத்து அவர்கள் என்னென்ன வழிகளில் தங்களுடைய மேல்படிப்பினை தொடரலாம் எனவும் ஆலோசனை வழங்குவதற்காக தொழில் வழிகாட்டுதல் (Career Guidance) வழங்கப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தொடர்ச்சியாக ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுகுறித்த முடிவினை தற்சமயம் மாண்புமிகு குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்தால் எடுக்க வேண்டிய  நிலையில் உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், நேற்று கூட புது டெல்லி சென்று ஒன்றிய அரசின் ஆயுஷ் மருத்துவத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் 100 ஆயுஷ் மருத்துவ மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கவும், நாமக்கலில் 50 படுக்கை கொண்ட சித்த மருத்துவ மையம் அமைக்கவும், பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதியும் கோரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து சாதகமான பதில்கள் பெறப்பட்டுள்ளன.  மதுரையில் அமைந்துள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மழைக்காலங்களில் மழை நீரில் மூழ்கும் அளவில் உள்ளது.

எனவே அந்தக் கல்லூரியை இடமாற்றம் செய்து கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் ஒன்றிய அரசிடமிருந்து நிதி ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் மட்டுமே செவிலியர் பயிற்சி மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன, பெரும்பாலான செவிலியர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் பயிற்சி பயின்று வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அதிகளவிலான கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது,  எனவே, பிற மாவட்டங்களிலும் செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று தற்சமயம் இந்தியாவில் உள்ள மாணவர்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இது குறித்த தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையமானது , உக்ரைன் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ள பிற நாட்டு கல்லூரிகளில் பயின்று அதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இது குறித்த நடவடிக்கைகள் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார் அவர்கள், அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக்குழுத் தலைவர் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


Tags : Minister ,M.Subramanian ,Saidapet , Saitappettai vegetable market, survey, Minister M. Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...