×

12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம்: குமரியில் இருந்து ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து இன்று (7ம் தேதி) மாலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீர் வரை மொத்தம் 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார்.

இதற்காக நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி சென்னை வந்து சேர்ந்தார். இன்று காலை, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு அவரது தந்தையும், முன்னாள் பாரத பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பகல் 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டார். திருவனந்தபுரம் வந்து சேரும் ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். பின்னர் காமராஜர் மணிமண்டபத்திலும், காந்தி மண்டபத்திலும் மரியாதை செலுத்தினார். இந்நிலையில் கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கி இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரும் உடனிருந்தனர். அங்கிருந்து 600 மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு ராகுல்காந்தி வருகிறார். ராகுல்காந்தியுடன் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள 118 பேர் உட்பட 300 பேர் பயணிக்கின்றனர். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஓய்வு எடுக்கிறார். ராகுல்காந்தியுடன் பாத யாத்திரையில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து 118 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 28 பேர் மகளிர் ஆவர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த காயத்ரிராஜ் முரளி, முகம்மது ஆரிப், வக்கீல் சுதா ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராகுல்காந்தியுடன் மொத்தம் 119 பேர் காஷ்மீர் வரை பாத யாத்திரை செல்கின்றனர். ராகுல் பாதயாத்திரை தொடர்பான விவரங்களை www.bharatjodoyatra.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்றும், அனைத்து தன்னார்வ பாதயாத்திரை செல்கின்றவர்களும் தினமும் மாலை 3 மணி முதல் யாத்திரையில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.


Tags : Kashmir ,Raqulin ,Kumari ,Chief Minister ,Mukheri ,K. Stalin , Walk through 12 states to Kashmir: CM Stalin launches Rahul's India Unity Yatra from Kumari
× RELATED ஸ்விஸ்-க்கே டஃப் கொடுக்கும்...