நியூயார்க் நீதிபதியாக இந்திய வம்சாவளி நியமனம்: அமெரிக்க அதிபர் உத்தரவு

வாஷிங்டன்: நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியனை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமனம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தில், இந்திய வம்சாவளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிபதியாக இந்திய வம்சாவளியான வழக்கறிஞர் அருண் சுப்ரமணியனை நியமிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரை செய்துள்ளார். செனட் மூலம் அவரது நியமனம் உறுதிசெய்யப்பட்டால், அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதியாக அருண் சுப்ரமணியன் விளங்குவார்.

முன்னதாக அருண் சுப்ரமணியன் கடந்த 2006 முதல் 2007 வரை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளியான வேதாந்த் படேல் (33), தற்போது வெளியுறவுத் துறையின் தினசரி செய்தியாளர் சந்திப்பை நடத்தும் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: