×

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை தாமதிக்காமல் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை தாமதிக்காமல் பிறப்பிக்குமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் சதாசிவபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சூரியபிரகாஷ் ஆன்லைன்  சூதாட்டத்தில் ரூ.75,000 இழந்ததால் நஞ்சு குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது நிலைமை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. சூரியபிரகாஷ் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக வைத்திருந்த பணத்தை சூதாடி இழந்திருக்கிறார் என்பதிலிருந்து ஆன்லைன் சூதாட்டம் மாணவர்களையும் அடிமையாக்கியுள்ளது; கல்லூரி கட்டணத்திற்கான பணத்தை வைத்து சூதாடும் அளவுக்கு போதையாக்கியுள்ளது என்பதை அறியலாம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஓராண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது ஒரு தற்கொலை முயற்சியும் நடந்துள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்றால், மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா? என்ற வினா எழுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இன்றுடன் 90நாட்களாகி விட்டன. அமைச்சரவையில் இரு முறை விவாதிக்கப்பட்டாகிவிட்டது. இனியும் தயக்கம் ஏன்? இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Pamaka ,President ,Annpurani Ramadas ,Government of Tamil Nadu , Online Gambling, Urgent Act, Dear Ramadoss
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது