குளியலறையில் வழுக்கி விழுந்த நிலையில் கர்நாடகா பாஜக அமைச்சர் மாரடைப்பால் மரணம்: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பெங்களூரு: குளியலறையில் வழுக்கி விழுந்த நிலையில் திடீர் மாரடைப்பால் கர்நாடக மாநில பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. அம்மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் வனத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி (61) என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு பெங்களூருவில் உள்ள டாலர் காலனி குடியிருப்பில் குளியலறையில் உமேஷ் கட்டி வழுக்கி விழுந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், உமேஷ் கட்டி மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். மறைந்த உமேஷ் கட்டிக்கு, மனைவி, மகன், மகள் ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கூறுகையில், ‘உமேஷ் கட்டியை மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவரது நாடித்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உமேஷ் கட்டியின் மறைவு பாஜகவுக்கும் பெலகாவி மாவட்டத்துக்கும் மிகப்பெரிய இழப்பு’ என்றார்.

மேலும் மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘எனது அமைச்சரவை சகாவும், நெருங்கிய நண்பருமான உமேஷ் கட்டியின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி, ஆற்றல் மிக்க தலைவர், விசுவாசமான தொண்டர்’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த உமேஷ் கட்டி, பெலகாவி மாவட்டம் ஹுக்கேரி தாலுகாவில் உள்ள பெல்லட்பாகேவாடியில் பிறந்தவர்.

ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 1985ல் அவரது தந்தை விஸ்வநாத் கட்டியின் மறைவைத் தொடர்ந்து உமேஷ் கட்டி அரசியலில் நுழைந்தார். கடந்த 2008ல் பாஜகவில் இணைவதற்கு முன்பு, ஜனதா தளம், ஜேடி(யு) மற்றும் ஜேடி(எஸ்) ஆகிய கட்சிகளில் இருந்தார். முன்னதாக ஜே.எச்.படேல், பி.எஸ்.எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: