உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

உடுமலை :  உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு தினசரி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருவியில் தவறாமல் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலையிலும் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. திருமூர்த்தி மலை அடிவாரத்தில் உள்ள கோயில் மண்டபத்தை சூழ்ந்தபடி வெள்ளநீர் பெருக்கெடுத்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக அருவியில் குளிக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  வனத்துறையினர் தொடர்ந்து நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளுக்கு தடை விதிப்பால், அருவி பகுதி ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளித்தது.

Related Stories: