திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 18 ஆண்டுகளில் ₹200 கோடியில் காய்கறிகள் நன்கொடை-தலைமை செயல் அதிகாரி தகவல்

திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 18 ஆண்டுகளில் ₹200 கோடியில் காய்கறிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்திற்கு காய்கறி நன்கொடையாக வழங்கி வரும் நன்கொடையாளர்களுடன் செயல் அதிகாரி தர்மா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது:  

ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவத்திற்கு முன்பு காய்கறி நன்கொடையாளர்களுடன் கூட்டம் நடத்துவது வழக்கம். கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காய்கறி நன்கொடை பெறும் திட்டத்திற்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை ₹200 கோடி காய்கறி  அன்ன பிரசாதத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து  காய்கறி நன்கொடையாளர்களின் அளப்பரிய பங்களிப்புகளுடன் வழங்கி உள்ளீர்கள். ரசாயன உரங்களின்றி இயற்கை முறையில் தயாரிக்கும் காய்கறிகளை வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். பக்தர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும்.

கடந்த மே மாதம் முதல் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை கொண்டு சுவாமிக்கு பயன்படுத்தப்படும் நைவேத்தியம் தயாரிக்கப்படுகிறது.

பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இயற்கை விவசாய தொழில் நுட்பங்கள் மூலம் விவசாய பொருட்களை வளர்க்க விவசாயிகளுக்கு பசுக்கள் (கறவை இல்லாத)  எருதுகளை இலவசமாக வழங்கப்படுகிறது. 2004ல் ஒரு நன்கொடையாளரை கொண்டு காய்கறிகளை நன்கொடையாக வழங்குவதை மெதுவாக அதிகரித்துள்ளோம்.  இன்று 17 தரமான காய்கறி நன்கொடையாளர்கள் கிடைக்கிறது. நமது பாரம்பரிய விவசாய விளை பொருட்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை உள்ளது.

இப்போது, மார்க் பெட் மூலம் ஒரு 12 வகையான இயற்கை பொருட்களை வாங்குகிறோம். அதில், 7000 டன் அரிசி மற்றும் 2,600 டன் கடலை பருப்பு மற்றும் பிற தானியங்கள் வாங்கப்படுகிறது. இயற்கை விவசாயிகளுக்கு சந்தை விலையை விட அதிக பலனை தரும் விதமாக கொள்முதல் செய்யப்படுகிறது. இயற்கை காய்கறிகளையும் படிப்படியாக ஊக்குவிக்க விரும்புகிறேன். அன்னபிரசாதங்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து விரைவில் இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பும் நடத்தப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக, அன்னப்பிரசாதத்திற்கான துணை செயல் அதிகாரி(பொறுப்பு) செல்வம் மற்றும் உணவு வழங்குவதற்கான சிறப்பு அதிகாரி சாஸ்திரி ஆகியோர்  விளக்கமளித்தனர். இந்த ஆண்டு தொடர்ந்து  பிரமோற்சவத்திற்கு இலை காய்கறிகளை வழங்க நன்கொடையாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். செயல் அதிகாரி அறிவுறுத்தலின்பேரில், இந்தாண்டு அன்னபிரசாத பிரிவில் மெனு அட்டவணையை தயார் செய்து, ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு பலவகையான உணவு வகைகளை தயார் செய்து வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் காய்கறி நன்கொடையாளர்களை பாராட்டி சால்வை அணிவித்து பிரசாதங்களை வழங்கி கௌரவித்தார். இதில் ஆந்திர, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் இயற்கை விவசாயிகள், செயல் அதிகாரி அன்னபிரசாதம்  கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: