கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளால் பாலாற்றில் தொடர் நீர்வரத்து இருந்தும் வேலூர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை

*பொதுப்பணித்துறை நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை

வேலூர் :  பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருந்தும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படாததால் ஏரிகள் நிரம்பவில்லை. இதற்கு உரிய நடவடிக்கையை பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் என்றும் காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள பாலாற்றை நம்பியிருக்கும் 90 சதவீத ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்தன. குறிப்பாக பாலாற்றின் நீர்வரத்தையே நம்பியிருக்கும் வேலூர் நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு காரணியாக இருக்கும் சதுப்பேரி, அன்பூண்டி, மேல்மொணவூர், பொய்கை, கழிஞ்சூர், காட்பாடி ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிந்தன. அப்போது பாலாற்றில் வந்த வெள்ளநீரை கால்வாய்களை சீரமைத்து திருப்பியதே இதற்கு காரணமாக இருந்தது.

அப்போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வடிந்த நிலையிலும் பாலாற்றில் சிறிய ஓடைபோல தண்ணீர் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.  இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களிலும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக மீண்டும் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

ஆனால் தற்போது பெய்து வரும் மறையின் காரணமாக பாலாற்றில் அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டும், இந்த நீர் பாலாற்றை நம்பியிருக்கும் சதுப்பேரி, பொய்கை, கழிஞ்சூர், தாராபடவேடு, காட்பாடி ஏரிகளுக்கு கிடைக்கவில்லை. காரணம், கடந்த ஓராண்டில் இந்த நீர்வரத்துக்கால்வாய்களில் அடைப்பும், புதர்கள் மண்டியும் காணப்படுகின்றன.

இதனால் வேலூர் நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு காரணியாக உள்ள ஏரிகளுக்கு பாலாற்று நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது பாலாற்று நீர் அப்படியே வீணாக வாலாஜா பாலாறு அணைக்கட்டை நோக்கி சென்று கொண்டுள்ளது.

எனவே, பாலாற்று நீரை வேலூர் நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு காரணியாக விளங்கும் ஏரிகளுக்கு திருப்பிவிடும் வகையில் வரத்துக்கால்வாய்களில் மராமத்து பணிகளை மேற்கொள்வதுடன், நீர்வரும் பாதைக்கு இடைஞ்சலாக உள்ள அனைத்தையும் அகற்றுவதற்கான நடவடிக்கையை பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 மாவட்டங்களில் 61 ஏரிகள் நிரம்பின

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 519 ஏரிகள் உள்ளன. இதில் காவேரிப்பாக்கம், நெல்லூர்பேட்டை உட்பட 61 ஏரிகள் முழு கொள்ளளவை  எட்டிப்பிடித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 101 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை. இதில் 6 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

தத்தளிக்கும் சதுப்பேரி

வேலூர் நகரின் நிலத்தடி நீராதாரமான சதுப்பேரியில் தற்போதைய நிலவரப்படி 30 முதல் 40 சதவீத நீரே உள்ளது. அதன் ஒரு பகுதியில்தான் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டது. அதில்தான் கடந்த 2ம் தேதி வேலூர் நகரில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இவை காகிதக்கூழ் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரீஸில் உருவாக்கப்பட்டதால் அவை கரைக்கப்பட்ட சதுப்பேரி தற்காலிகமாக உருவாக்கப்பட்ட குளத்தில் உள்ள  தண்ணீரின் நிறம் மாறியுள்ளதுடன், துர்நாற்றம் வீசிக் கொண்டுள்ளது. இந்த தண்ணீரால் சதுப்பேரியின் நிலத்தடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளதாக அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: