குட்டி யானையைத் தாயுடன் இணைக்கும் வெற்றிகரமான முயற்சியின் போது, தூங்கிக் கொண்டிருந்த குட்டி யானைக்கு குடைபிடித்த தமிழ்நாடு வனத்துறை

நீலகிரி: குட்டி யானையைத் தாயுடன் இணைக்கும் வெற்றிகரமான முயற்சியின் போது, தூங்கிக் கொண்டிருந்த குட்டி யானைக்கு தமிழ்நாடு வனத்துறையினர் நிழலுக்காக குடைபிடித்து நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாவனல்ல வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாவனல்ல ஆற்றில் குட்டி யானை ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டியானையை பத்திரமாக மீட்டனர்.

இதனை தொடர்ந்து வனத்துறையினர், தாயின்றி தவித்து வந்த அந்த குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியால் 8 குழுக்களாக பிரிந்து மாவனல்ல,வாழைத்தோட்டம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பூபதி பட்டி மற்றும் காங்கிரஸ் மட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதையும், அதன் அருகே ஒரு பெண் யானை தனியாக இருப்பதையும் அறிந்த வனத்துறையினர் உடனடியாக குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது, தமிழ்நாடு வனத்துறையினர் யானை குட்டியை தாயுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அந்த குட்டி யானை தூங்கி கொண்டிருப்பதை பார்த்த தமிழ்நாடு வனத்துறையினர் அது தூங்கும் அழகை கண்டு அதற்கு நிழலுக்காக குடை பிடித்து நிற்கின்றனர். அவர்களின் கருணை மற்றும் அக்கறை பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை சுற்றுச்சூழல் தலைமைச் செயலாளரான சுப்ரியா சாகு தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளப்பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories: