×

திருப்புத்தூர் பெரிய கண்மாயில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

*தண்ணீர் வளம் காப்பாற்றப்படும்

*விவசாயிகள், பொதுமக்கள் பாராட்டு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் பெரிய கண்மாயில் 476 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரங்களை சீரமைத்து நிலத்தடிநீரை மேம்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதனடிப்படையில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்து வாய்க்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கழுங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு நீர்நிலைகளை சீரமைத்திட அறிவுறுத்தி உள்ளார்.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளான கண்மாய் குளம், குட்டை, வரத்து வாய்க்கால், சாலை பகுதிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்.24ம் தேதி திருப்புத்தூர் பெரியகண்மாயில் சீமை கருவேல மரங்களை அகற்றும்பணியை, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் உள்ள முடிமலை, கரந்தமலை, களவற்காடு வனப்பகுதியில் பாலாறு உற்பத்தியாகி நத்தம் அருகில் உள்ள செந்துரை கிராமத்திலிருந்து ஆறாக வடிவுபெற்று, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் பகுதிகளில் தென்கிழக்காக பாய்ந்தோடி முடிவில் திருப்புத்தூர் பெரியகண்மாயினை வந்தடைகிறது. திருப்புத்தூர் பெரியகண்மாய் மருதுபாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட கண்மாயாகும்.

இக்கண்மாய் மொத்தம் 476 ஏக்கரில் அமைந்துள்ளது. இக்கண்மாயின் கரையின் நீளம் 2520 மீட்டராகும். இக்கண்மாயில் பாசன வசதி அளிப்பதற்கு என 4 மடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பாசன பரப்பளவு 1023.93 ஏக்கர் (414.38 எக்டர்). 75 மில்லியன் கன அடி நீர் தேக்கும் திறன் கொண்ட இக்கண்மாயின் நீர் பிடிப்பு பரப்பளவு 3.08 சதுர கிலோமீட்டர் (1.93 சதுர மைல்) ஆகும்.

உபரி நீர் செல்வதற்கு 33.55 மீட்டரும், 23.00 மீட்டரும், 17.00 மீட்டரும் நீளம் கொண்ட மூன்று கழுங்குகள் மற்றும் ஒரு திறந்த வென்ட் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இக்கண்மாயின் உபரி நீர் மனைய கண்மாய்க்கு செல்கிறது. பாலாற்றில் இருந்து வரும் வரத்து கால்வாயின் நீளம் 1300 மீட்டர், அகலம் 7.50 மீட்டர் ஆகும். ஒசுவன் கண்மாயிலிருந்து வரும் உபரி நீர் கால்வாயின் நீளம் 23.00 மீட்டரும், அகலம் 5 மீட்டரும் ஆகும்.

தற்போது இந்த கண்மாயில் கடந்த 4 மாதங்களாக 4க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை அவ்வப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். தண்ணீர் வளத்தை காக்கும் வகையில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுவரை 170 ஏக்கர் ‘கிளீன்’

நீர்வளத்துறையின் திருப்புத்தூர் உதவி செயற்பொறியாளர்  சங்கர் கூறுகையில், ‘‘திருப்புத்தூர் பெரியகண்மாயில் உள்ள கருவேல மரங்களை முழுமையாக அகற்றியபின், கண்மாயை தூர்வாரி ஆழப்படுத்தவும், வட்ட புதிய 4 மடைகள் கட்டவும், கண்மாயின் 2520 மீட்டர் நீளமுள்ள கரையை உயர்த்தி பலப்படுத்தவும், 4 மடைகளுக்கும் பாசன வாய்க்கால் கட்டவும், வரத்துக்கால்வாய் உபரி நீர் செல்லும் கால்வாயை சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

இக்கண்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைத்தால் அதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். விவசாய பணி தேவைகள், குடிநீர் தேவைகள் மேம்படுவதோடு கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரமாக அமையும். தற்பொழுது இக்கண்மாயில் 4க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கடந்த நான்கு மாதங்களாக 170 ஏக்கர் வரை சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மழை பெய்யும் நாட்கள் தவிர தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Tags : Tiruputhur: The work of clearing 476 acres of symai oak trees in Periya Kanmai, Tiruputhur is in full swing.
× RELATED மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும்...