ஓணம் நன்னாளில் ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும்: ஓ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வாழ்த்து

சென்னை: கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் கொண்டாடப்படுகிறது.

ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக அம்மாநில மக்கள் நம்புகின்றனர். இதனால் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் கோலமிட்டு வரவேற்பார்கள். கேரளாவில் மட்டுமின்றி கேரள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி தமிழக அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

ஓ.பன்னீர்செல்வம்:

ஓணம் நன்னாளில் ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்ந்திட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பக்கத்தில், பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்ததும், அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழும் ஓணம் பண்டிகையை உவகையோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

வி.கே.சசிகலா:

மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் என வி.கே.சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி:

மலையாள மக்கள் இல்லங்களில் எல்லா வளங்களையும் நலங்களையும் கொண்டுவந்து சேர்க்கட்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்:

பொன் ஓணம் திருநாளை கொண்டாடும் மலையாள மொழி பேசும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஓணம் கேரள மக்களின் அறுவடை திருநாள் மட்டுமின்றி, சாதி, மாதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கொண்டாடி மகிழும் நாள். இந்நன்னாளில் சாதி, மதங்களை கடந்து, அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கு உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: