பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய பணிகளை முடிக்க வேண்டும்; கலெக்டரிடம் எம்எல்ஏ மனு

தாம்பரம்: தொகுதியில் உள்ள முக்கிய பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் மனுக்கள் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஆணையிட்டதின்படி பல்லாவரம் தொகுதியில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள முக்கியமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் இடம் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மனு அளித்துள்ளார். அதில், பல்லாவரம் நகர பகுதியில் பாதாள சாக்கடை விரைந்து முடிக்க வேண்டும். பொழிச்சலூர் ஊராட்சியில் நிரந்தர குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும். பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, திருநீர்மலை பெரிய ஏரி, நெமிலிச்சேரி ஏரி ஆகிய ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். பல்லாவரம் - குன்றத்தூர்  சாலையை அகலப்படுத்த வேண்டும். பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை வழியாக பழந்தண்டலம் வரை செல்லும் சாலை, குரோம்பேட்டை எம்.ஐ.டி யிலிருந்து அஸ்தினாபுரம் வழியாக நன்மங்களம் மற்றும் மேடவாக்கம் வரை செல்லும் சாலை மேற்கண்ட சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையை பன்நோக்கு மருத்துவமனையாக அமைக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களை பூர்த்தி வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள், ஆய்வகக் கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ள பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். அனகாபுத்தூரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும். திருநீர்மலை பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டி கல்லூரியை ஏழை மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிவகை செய்ய வேண்டும். குரோம்பேட்டை பகுதியில் உள்ள போக்குவரத்து பாலிடெக்னிக் கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு வகுப்பறைகள், ஆய்வகங்கள், உணவு அருந்தும் கூடம், கழிவறை ஆகியவற்றை சரிசெய்தும், மாணவர்கள் தங்கும் விடுதியில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

பொழிச்சலூர் ஊராட்சி மற்றும் திரிசூலம் ஊராட்சி பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் பிரச்சினை, மழைநீர் கால்வாய் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரியை படகு தளமாக உருவாக்க வேண்டும். திருநீர்மலை பெரிய ஏரியை தூர் எடுத்து அகலப்படுத்தி சுற்றி நடைப்பாதை அமைத்து அழகுப்படுத்தி படகு குழமம் நிறைவி சுற்றுலா தளமாக உருவாக்க வேண்டும். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலம் வரை ஒரு மேலடுக்கு மேம்பாலம் அமைத்து போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண வேண்டும். முதியோர்கள் மற்றும் விதவை தாய்மார்கள், உதவித்தொகை பெற புதிய பிபிஎல் பட்டியல் தயாரிக்க ஆவண செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: