×

சவுகார்பேட்டை பகுதியில் தொழில் வரி, உரிமம் பெறாத 160 கடைகளுக்கு அதிரடி சீல்; அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சவுகார்பேட்டை பகுதியில் தொழில்வரி, கடை உரிமம் பெறாத 160 கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாயாக உள்ளது. ஆனால், ஏராளமானோர் லட்சக்கணக்கில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் பாதிப்பதுடன், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது.

இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமீப காலமாக அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி, நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் சில தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 5வது மண்டலம் வார்டு 57க்கு உட்பட்ட குடோன் சாலை, கோவிந்தப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 160 கடைகளுக்கு பல ஆண்டாக தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தாமலும் கடை நடத்தி வந்துள்ளனர்.

இவர்களுக்கு தொழில் வரி, தொழில் உரிமம்  பெற கோரி வருவாய் துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் தொழில் உரிமம் பெறாமலும், தொழில் வரி செலுத்தவில்லை. இதனால், நேற்று காலை சென்னை மாநகராட்சி 5வது மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் நிதிபதி ரங்கநாதன், முருகேசன் வரி மதிப்பீட்டாளர் ரஹமதுல்லா, உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், பத்மநாபன் உள்ளிட்டோர் நேற்று காலை பூக்கடை போலீசார் உதவியுடன் மேற்கண்ட 160 கடைகளுக்கு சீல் வைத்தனர். கடைக்காரர்கள் உடனடியாக தொழில் வரியும், உரிமமும் பெற வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Saukarpet , 160 business tax, unlicensed shops in Saukarpet area sealed; Officers action
× RELATED நகை வியாபாரி வீட்டில் 150 கிராம் நகை கொள்ளை? பல மாதங்கள் கழித்து புகார்