தரமணி ஓட்டல் மேனேஜ்மென்ட் பள்ளியில் படித்த ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்பு

சென்னை: தரமணியில் உள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் படித்து முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய  பட்டப்படிப்பு  மற்றும் பட்டய படிப்பு  படிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி  மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தரமணியில் உள்ள Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந் நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. இந்த நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு பி.எஸ்சி மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை  ஆண்டு முழுநேர  உணவு தயாரிப்பு பட்டய படிப்பும், மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் பற்றிய படிப்பும் படிக்கலாம்.  

படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம்  வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது.  இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும். இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ /மாணவிகள் 12 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவராக  இருக்க  வேண்டும்.  ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000 முதல் ரூ,35,000 வரை பெறலாம். இப்படிப்பில்  விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வருகிற 14ம் தேதிக்குள்  பதிவு  செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: