சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு தூய்மை பணி

செய்யூர்: சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில், ‘நம்ம ஊரு சூப்பரு’ தூய்மை பணி துவக்க விழா  நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தூய்மைபடுத்தும் பணிக்கான துவக்க விழா சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில், ஒன்றிக்குழு பெருந்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முழு சுகாதாரக் குழு திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் செல்வகுமார் கலந்துகொண்டு தூய்மை பணியினை தொடங்கி வைத்தார்.  

வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை துறை, பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கட்டிடம், தபால் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலக கட்டிடம் ஆகியவைகளை தூய்மைப்படுத்தினார். அதன்பிறகு, மக்கும், மக்கா குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது  குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணில் கொட்டுவதால் மண் வளம் பாதிப்பு குறித்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டன. இதனை தொடர்து, விழாவில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த மாட்டோம், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மூலம் வீட்டு தோட்டம் அமைப்போம், சுற்று புறத்தை தூய்மை காப்போம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த விழாவில், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு,  ஊராட்சி மன்ற தலைவர் குமுதா, மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: