×

கன்டெய்னர் லாரிகளில் இருந்து நூதன முறையில் பல கோடி ரூபாய் பொருட்களை; கொள்ளையடித்த கும்பல் கைது: ரூ.2.75 கோடி பொருட்கள் பறிமுதல்

தாம்பரம்: தாம்பரம், சானடோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் 18ம் தேதி ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சுமார் 14,400 கிலோ மருந்து பொருட்கள் கன்டெய்னர் லாரியில் ஏற்றி சீல் வைத்து, சென்னை துறைமுகத்திற்கு அனுப்பட்டது. ஆனால் கன்டெய்னர் லாரியில் அனுப்பப்பட்ட 4800 கிலோ மருந்து குறைவாக இருந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தனர். அதில், தங்களது நிறுவனத்திலிருந்து ஜெர்மனுக்கு ஏற்றுமதி செய்ய கன்டெய்னர் லாரிகளில் அனுப்பப்பட்ட மருந்து பொருட்களில், சுமார் ரூ.98 லட்சம் மதிப்புள்ள 4800 கிலோ மருந்து பொருட்கள்,கன்டெய்னர் சீல் உடைக்கப்படாமல் நூதனமுறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து தங்களது மருந்து பொருட்களை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், தாம்பரம் காவல் துணைஆணையர் சிபிசக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (27), மாறன் (எ) இளமாறன் (29), சிவபாலன், வடசென்னையை சேர்ந்த கார்த்திக் (34), முனியான்டி (36), ராஜேஷ், கவுரிசங்கர் (32) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில், சதீஷ்குமார், மாறன் (எ) இளமாறன், கார்த்திக், முனியாண்டி, கவுரிசங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், இவர்கள் கன்டெய்னரில் உள்ள சீலை அகற்றாமல், சீலுக்கு மேலும், கீழும் உள்ள போல்டுகளை அகற்றி, மருந்து பொருட்களின் ஒரு பகுதியை கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் புதிய போல்டுகளை பொருத்தியதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீஞ்சூர் அருகிலுள்ள கவுண்டர்பாளையத்தில் கவுரிசங்கர் உதவியுடன் பதுக்கி வைத்து முனியாண்டி, ராஜேஷ் ஆகியோர் மூலமாக விற்று அதிக பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த கும்பல் தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் இருந்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள், ஆம்புரில் இருந்து கன்டெய்னரில் கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3000 ஜோடி ஷூக்கள், திருப்போரூர் அருகிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குழந்தைகள் பயன்படுத்தும் 1100 கீபோர்டுகள் ஆகியவற்றை கொள்ளையடித்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், இக்கும்பல் ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து இத்தாலி நாட்டிற்கு கடந்த ஜூலை மாதம் ஏற்றுமதி செய்ய கன்டெய்னரில் அனுப்பிய 1800 ஜோடி ஷூக்கள், ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய கன்டெய்னரில் அனுப்பபட்ட 1000 ஜோடி ஷூக்களை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. கன்டெய்னரில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியாமலேயே, அவை வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. வெளிநாட்டில் இந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது, பொருட்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சில மாதங்கள் கழித்துதான் புகார்கள் வருகின்றன. இதனால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பல துறைமுகங்களை கடந்து செல்வதால் எங்கு கொள்ளை போனது என தெரியாமல் போகிறது. எனவே, புகார் அளிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும், வெளிநாட்டினர்களிடம் நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்தன.

இவ்வாறு கொள்ளை சம்பவங்கள் குறித்து புகார் அளிக்கப்படாமல் போனதால், இந்த கொள்ளை கும்பல் தொடர்ந்து இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை பல ஆண்டுகளாக செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், சதீஷ்குமார், மாறன் (எ) இளமாறன், கார்த்திக், முனியாண்டி, கவுரிசங்கர் ஆகியோரை போலீசார் நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சிவபாலன், ராஜேஷ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யபட்ட சுமார் 2 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.முன்னதாக, நேற்று தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், தாம்பரம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்டெய்னர் லாரிகளை குறிவைத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கொண்டு செல்லப்படும் பொருட்களை அதன் ஓட்டுநர் உதவியுடன் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாறன் என்ற நபர் ஏற்கனவே லாரிகளில் இருந்து டீசல் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மிகவும் குறைந்த விலையில் கொள்ளையர்கள் விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளனர். பெரும்பாலான நிறுவனங்கள், ஏற்றுமதிக்காக அனுப்பப்படும் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்புவது என்று தெரியாமல் அனுப்புகின்றனர். எனவே, இதுபோன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Loot , Multi-crore goods from container trucks in a modern way; Loot gang arrested: Rs 2.75 crore goods seized
× RELATED கிறிஸ்தவ மத தலைவரை கொல்ல ஐஎஸ்...